In General

இரண்டாயிரம் ஆண்டுகளாக தஞ்சையை வளப்படுத்தும் விண்ணாறு !!!

தஞ்சை எனும் இந்த பேரூர் பன்னெடுங்காலமாய் உயிர்ப்போடு இயங்கும் ஒரு ஒப்பற்ற நகரம். பல இன மன்னர்களை கண்ட ஓர் வரலாற்று சிறப்புமிக்க நகரம். இந்த சரித்திர புகழ் மிக்க தஞ்சை நகரில் பாயும் ஒரு புண்ணிய நதி வெண்ணாறு. இந்த ஆறு கல்லணையில் இருந்து பிரியும் காவிரியின் ஒரு கிளை நதி. இந்த விண்ணாறு விண்ணன் என்பவன் வெட்டினான் என்று சோழமண்டல சதக பாடல் கூறுகிறது. அந்த பாடல் இதோ

கண்ணார் உலகில் பகிரதணும்
கண்டு கொணர்ந்தான் கங்கையான் பார்
விண்ணாறு எளிதோ ஆறுதந்த
வேளான் குரிசில் விண்ணை அன்றோ !!!

——என்பது சோழமண்டப சதகப் பாடலாகும். இந்த பாடலின் விளக்கம், பகிரதன் கங்கையை உலகிற்குக் கொண்டு வந்தது போல விண்ணன் இந்த ஆற்றை வெட்டினான் என்று சோழமண்டல சதகம் புகழுகிறது.

முழங்கு கடல்தானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன் !!!
—-என்று யாப்பருங்கலவிருத்தி மேற்கோள் பாடல் கூறுகிறது .

இவன் நாகமணியைப் புலவர்க்கு ஈந்தவன் என்று ஒரு தனிப்பாடல் புகழ்கிறது.

கூர்ந்த வருமையிடைக் கோள் அரவம் ஈன்றமணி
சார்ந்த தனக்களித்தான் வார்ந்ததரு
மேலவை விண்ணனின் மண்ணில் விளங்கும் புகழ் படைத்த சாலை வின்னுறுக்கு இணையார்தாம்

—என்பது பழம்பாடல். இவன் வெட்டிவைத்த ஏரியால் ஓர் ஊர் பெயர் வழங்குகிறது .பாண்டிய குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டு வின்ன நேரியான மும்முடிச் சோழநல்லூர் என்பது தஞ்சை பெரியகோயில் கல்வெட்டின் ஒரு பகுதியாகும்.

விண்ணன் வெட்டிய இந்த வெண்ணாறு இரண்டாயிரம் ஆண்டுகளாக காவிரி படுகையில் வெள்ளாமை செய்து வளம் பெருக செய்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இன்று எத்தனையோ நவீன வசதிகளுடன் இருந்தும் கூட நீரை தேக்குவதிலும், சேமிப்பதிலும், வெள்ளாமை செய்ய முறையாக பயன்படுத்துவது என்று எதையும் நாம் முறையாக சரியாக செய்வது இல்லை, அல்லது நீரை தேக்கி விவசாயம் வாழ வழிவகை செய்ய அரசியல் வாதிகளுக்கு மனம் இல்லை. ஆனால் சுமார் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரை அமைத்து நீரை தேக்கிய நமது முப்பாட்டன் கரிகாலன் எப்பேர்பட்ட பொறியியல் திறன் மிக்கவனாக இருந்து இருக்கவேண்டும். கல்லணை கரை மட்டும் அல்ல பல இடங்களில் பாறைகள் பிளக்கப்பட்டு தடுப்பணைகளும் அமைத்து இருகிறார்கள் என்றால் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு மிகப்பெரிய நாகரீக வாழ்கையை வாழ்ந்த உலகிற்கே ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு இனம் என்றால் அது மிகையல்ல.

வெண்ணாற்றின் அமைக்கப்பட்ட தடுப்பணை மற்றும் வாணிபத்திற்காக பயன்பட்ட விதம் பற்றி பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் விரிவாக காண்போம். தஞ்சையிலிருந்து பூதலூர், ஒரத்தூர் வழியாக கல்லணை செல் லும் வழியில் உள்ள கச்சமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே மிகவும் பழமை யான தடுப்பணை அமைந்துள்ளது. இப்பகுதியில் வெண்ணாறு 2 ஆயிரம் ஆண்டுகளாக ஓடி வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் எள்ளுப் பொதிகள் படகுகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முற் கால சோழ மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்த உறையூரிலிருந்து நேர்கிழக்காக கச்சமங்கலம், மாரநேரி, ஒரத்தூர் முதலிய ஊர்களை உள்ளடக்கிய பூதலூர் வரை சேரர் ஆட்சிப் பகுதியாக இருந்துள்ளதை சங்க இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது.

வெண்ணாற்றில் இயற்கையாக அமைந்த மலையின் பாறை வெட்டப்பட்டு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிட்டத்தட்ட 3 மைல் தூரத்திற்கு பாறைகள் வெட்டப்பட்ட வழியிலேயே வெண்ணாறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து முற்கால சோழ மன்னர்கள் காலத்தில் நேரிமலை பிளக்கப்பட்டு வெண்ணாற்றில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பார்த்து தான் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கல்லணை கால்வாய் பூதலூரின் மேற்கே தொடங்கி தஞ்சை ரெட்டிப்பாளையம் பகுதி வரை 23 கி.மீ. தொலைவிற்கு உள்ள பாறைகள் நவீன எந்திரங்கள் கொண்டு பிளக்கப்பட்டு நீர்வழி உண்டாக்கப்பட்டுள்ளது.
இம்மலை அமைந்துள்ள இடம் பற்றி இலக்கியங்கள் துணையுடன் கள ஆய்வின் மூலம் தஞ்சை மாவட்டம் பூதலூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை யில் ஒரத்தூர், கச்சமங்கலம், மாரநேரி முதலிய ஊர் களை உள்ளடக்கிய பகுதி களே நேரிமலை இருந்த கச்சமங்கலத்தில் பழமையான தடுப் பணை அமைந்துள்ளது.

வெண்ணாற்றின் தென் கரையில் உள்ள ஊர் காடவன் மகாதேவி என்றும், விருதராஜ பயங்கரச் சதுர்வேதி மங்களம் என்றும் வழங்கப்பட்டதற்கான குறிப்புக்கள் உள்ளது. இவ்விரு பெயர்களும் குலோத்துங்கனின் மனைவியையும் , குலோத்துங்கனையும் குறிக்கும் பெயர்கள் ஆகவே விண்ணாற்றங்கரையை சுற்றி உள்ள ஊர் முதலாம் குலோதுங்கள் காலத்தில் அமைக்கபெற்ற சதுர்வேதி மங்களம் என்பது உறுதி. அதே போல் விண்ணாற்றங்கரையின் வட கரையில் உள்ள ஊருக்கு பள்ளி அகரம் என்று பெயர். குலோத்துங்கன் காலத்து இந்த ஊரே இன்று பள்ளியகிரகாரம் என்று மருவி இன்றும் வழக்கத்தில் உள்ளது.வெண்ணாற்றங்கரை என்ற இந்த பகுதிக்கு குலோத்துங்கன் காலத்தில் இருந்து தான் மேற் கூறிய பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது என்று ஆராட்சியார்கள் கூறுகிறார்கள். அதற்கு முன் இந்த பகுதியின் பெயர் பற்றி அறியமுடியவில்லை.

இந்த பள்ளி அகரம் பகுதியில் உள்ள வெண்ணாற்றின் குறுக்கே உள்ள பாலம், கி பி 1836 இல் கட்டி முடிக்கப்பட்டதாகும். தஞ்சையை ஆண்ட கடைசி மன்னரான சிவாஜியால் கட்டபெற்றதாகும். இந்த பாலம் கட்டுவதற்கு 300 மூங்கில்களும் 100 பனை மரங்களும் கொண்டு வரப்பட்டதை பற்றி மோடி ஆவணம் கூறுகிறது. இந்த பணிகள் ஆங்கிலேய பொறியாளர்களால் செய்யப்பட்டது. மேலும் இந்த பணிகள் நடக்கும் பொழுது ஒரு ஆங்கிலேய பொறியாளன் இறந்த செய்தி துய பேதுரு ஆலய கல்லறை கல்வெட்டில் உள்ளது. லெப்டினென்ட் கர்னல் மக்ளீன் என்ற ரெசிடென்ட் தஞ்சையில் தங்கி இருந்த பொழுது சிவாஜி மன்னர் இந்த பாலத்தை கட்டி முடித்தார் என்று ஒரு கல் வெட்டு அங்கு இருந்தது.

பழமையான இந்த பாலம் நல்ல நிலையில் இருந்தாலும் தற்போதைய வாகன போக்குவரத்து பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி போனது. ஆகவே இந்த இந்த இடத்தில உள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் 5.15 கோடியில் அமைக்க நெடுஞ்சாலை துறை தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியது. கடந்த திமுக ஆட்சியில் பாலம் கட்ட அறிவிப்பு வந்தது ஆனால் நிதி வராமல் வெறும் அறிவிப்போடு இந்த திட்டம் இருந்தது. பின்னர் 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதி ஒதுக்கபட்டது, பணிகள் விரைவாக தொடங்கி 2013 ஜனவரி 30 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

குறிப்புக்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயாவின் தஞ்சாவூர் நூல், இ ராசு அவர்களின் நெஞ்சை அல்லும் தஞ்சை, மற்றும் நாளிதழ் செய்திகளின் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு உள்ளது

நன்றி

“தஞ்சை மைந்தன்” கணேஷ் அன்பு

Comments

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Contact Us

For Immediate quires Please contact here...

Not readable? Change text. captcha txt