January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / நானும் தஞ்சையும் !!!

நானும் தஞ்சையும் !!!

0

நானும் தஞ்சையும் !!!

தஞ்சை எனும் இந்த மந்திர சொல் கேட்டவுடன் கண்ணை மூடி என் ஊர் என்று சிலாகிக்கும் எண்ணற்ற தஞ்சை மைந்தர்களில் நானும் ஒருவன். இந்த புல்லரிப்பு நான் தஞ்சையில் பிறந்ததாலா அல்லது இது காலம் காலமாய் தொட்டு தொடரும் ஒரு உன்னத உறவா என்று குழம்பி தவிக்கும் தஞ்சை காதலர்களில் தவிர்க்க முடியாத கூட்டத்தில் அடியேனுக்கும் இடமுண்டு. அப்படி என்னதான் உள்ளது இந்த தஞ்சையில் ஏன் பிறந்தது இந்த காதல் என்று அடிமனதை அலசி பார்த்தாலும் சல்லடை கொண்டு சலித்து பார்த்தாலும் கண்டுகொள்ள முடியா ஒரு இனம் புரியா உறவு. கண்டதும் காதல் என்பது போல் கருவாய் உருவான பொழுதே காதலும் மலர்ந்திருக்கும் .. சரி தஞ்சையை பற்றி புளங்காகிதம் அடைந்து பேச தொடங்கினால் வார்த்தை வந்து கொண்டே இருக்கும், விடயத்திற்கு வருவோம்.

இன்று டி.வி.எஸ். சோமு அண்ணா ஒரு பதிவை பகிர்ந்தார், தஞ்சையில் ரிச்சா இழுக்கும் ஒருவரை பார்த்தேன் என்று ஆச்சர்யமாகவும், சிறிய வருத்தத்தோடும். அதை படித்தவுடன் எனது நினைவு என் சிறு பருவத்திற்கு சென்றது கண்ணை விழித்தால் 20 ஆண்டுகள் கடந்து கிட்ட தட்ட 1990 களுக்கு சென்றது. ஆகா இன்று நான் ஒரு 7 வயது சிறுவன் வடக்கு ஆசாரத்தில் இருக்கும் ஒரு சிறுவன். அடடா ஓட்டு விடுகளும் அகலமான எங்கள் சந்தும் என்னை ஆட்கொண்டது. எங்க இந்திராணி அக்காள் சந்து 30 ஆண்டுகள் பழமையான காய்கறி சந்தை அருகில். எங்கள் பகுதியே இந்த சந்தையை நம்பித்தான் வாழ்வாதாரம். வீட்டுக் ஒருவர் காமராஜ் சந்தையில் இருப்பவர் தான்.

காமராஜ் சந்தை, ஐயன்கடை தெரு, அரண்மனை, தூய பேதுரு மேல்நிலை பள்ளி, இந்திய உணவுக் கழக அலுவலகம் என்று தஞ்சையின் முக்கிய பகுதியில் வசிப்பவன் நான். அட டா வீதிகளின் அந்த ரிக்க்ஷா வண்டிகளும் மாட்டு வண்டிகளும் செல்வது என்ன அழகு. கூடவே ஒன்று இரண்டு கார்களும், சரக்கு லாரிகளும் என சாலை சுருசுருபோடு இயங்குகிறது. கொடிமரத்து மூலையில் ஒரு ரிக்க்ஷா ஸ்டாண்ட் ஐயோ எத்தனி ரிக்சா நிக்குது பாரேன். தெருவில் திரியும் எருமையும் பசுவும் எத்தனை அழகு. அது என்ன ஆத்தா மாட்டு சாணியை அள்ளிட்டு இருக்காங்க, ஆத்தா என் மாட்டு சாணியை அள்ளுற நாற்றம் அடிக்கலையா, பேராண்டி இது இயற்கை உணவு சாப்பிட்ட மாடு இதில் நாற்றம் இருக்காது வீட்டு வாசலில் தெளித்தால் நல்ல கிருமி நாசினி, இதை வயல் இயற்கை உரமா கூட போடுவாங்க, ஆனா எல்லாம் சில வருடம் தான் நீ பெரியவனா ஆகும் போது பாரு ஊட்டச்சத்துனு சொல்லி கண்டத குடுத்து மாட்ட திங்க வச்சி போடுற சாணி ஏழு ஊருக்கு நாறும் பாரு.( அன்று அந்த ஆத்தா சொன்னது எத்தனை பெரிய உண்மை )

வாரம் சனிக்கிழமைகளில் அப்பா ஆடகார தெருவில் உள்ள தாத்தா வீட்டுக்கு (அம்மா வீடு) கூட்டி செல்வார்கள், தாத்தா பெயர் கருணானந்தம் ஆனா தாடி காரர் அப்படின்னு சொன்னா தான் அந்த பகுதியில் எல்லாருக்கும் தெரியும். அப்பொழுது அப்பா இந்து சுசுகி வைச்சி இருந்தாங்க நான் என்னோட அண்ணன் பாரதி, தங்கை திவ்யா எல்லாரும் செம குசியா போவோம். கொண்டிராஜா பாளையம், கீழவாசல் வழியா போவோம் அப்போ கீழவாசல் தூய பேதுரு பள்ளி அருகே ஒரு மாட்டு தொழுவம், மாட்டு வண்டி வாடைகைக்கு நிற்கும், இது இன்றுவரை உள்ளது ஆனால் அன்று இருந்த கலை இல்லை. காமராஜர் சிலை தாண்டி போவோம், அங்கே ஒரு பெரிய அருசி மில் இருக்கும் அப்படியே பார்த்து போவோம். இரண்டு நாள் அங்கே இருப்போம் இதில் வடக்க சூலம் வந்த ரொம்ப மகிழ்ச்சி தாத்த அடுத்த நாள் போலாம் அப்டின்னு சொல்லிடுவாங்க. அந்த ஆடகார தெரு சொர்க்கம் என்ன அமைதி என்ன அழகான இடம். அங்கே ஒரு இடத்தில பருத்தி மரம் சவுக்கு மரம் இருக்கும் அந்த காட்டுக்குள் போய் செமையா விளையாடுவோம். தாத்த வீட்டில் இருந்து திரும்ப வரும் பொழுது மாட்டு வண்டி தான் இன்று அந்த மாட்டு வண்டி பலர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை. மணல் கொண்டு போகும் மாட்டு வண்டி தான் தெரியும் மனிதர்கள் போகும் வண்டி தெரிய வாய்ப்பு குறைவு. கரகாட்ட காரன் படத்தில் வரும்ல அப்படி இருக்கும். ஆனால் இத்தனை குறிகிய காலத்தில் அந்த மாட்டு வண்டி அனுபவத்தை இழப்பேன் என்று கனவிலும் நினைக்க வில்லை.

அதே போல் ரிக்சா வண்டி வாழ்கையில் மறக்க முடியாத பயணம். இன்று தஞ்சையில் ஆட்டோ, கால் டாக்சி தான் அழைப்போம், அன்றைய தஞ்சை வாசிகளுக்கு இது தான் “கால்” டாக்சி. எங்க சித்தப்பா கூட சில காலம் இந்த ரிக்சா ஓட்டி இருக்காங்க. இந்த ரிக்சா காரங்களுக்கு அதிகமா வேலை கூப்டா கூட பிஸியா இருந்த நேரம் ஒன்னு இருந்துச்சு அது 1995 உலக தமிழ் மாநாட்டின் பொழுது பள்ளியக்ராகாரம் அருகே இந்திய ராணுவத்தால் ஒரு மிதவை பாலம் போட்டாங்க அந்த மிதவை பாலம் பார்க்க தஞ்சையின் பல பகுதி மக்களை கொண்டு சென்ற பெருமை தஞ்சை ரிக்சா காரங்கலையே சாரும்.

11130277_1094940237199274_7313438429775174566_n

இப்படி நம் சமகாலத்திலே நாம் பலவற்றை இழந்துவிட்டோம் நான் பார்த்த அந்த வாகனங்கள் இன்று இல்லை பெரிய மாற்றம், மாற்றம் என்ற ஒன்றே மாறாதது ஆதி மனிதன் தொடங்கி பல்லவர், முத்தரையர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் என்று இன்று வரை பல மாறுதல்களை கண்ட நகரமல்லவா தஞ்சை அகவே நாம் மாற்றத்தை குறை கூற முடியாது, ஆனால் அது போன்ற மாட்டு வண்டி, ரிக்சா வண்டி பயண அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு அரசே வழங்கினால் நல்ல லாபமும் கிடைக்கும் நம் கண் முன்னே ஒரு தொழிலும் அழியாது.

சமீபத்தில் பகுடியாக ஒரு காணொளி பார்த்தேன் அதில் ஒன்று தஞ்சையில் விவசாயம் செய்யும் ஒரு குடும்பம் கண்டுபிடிப்பு என்று வரும் ஏனோ டி.வி.எஸ். சோமு அண்ணாவின் தஞ்சையில் ஒரு ரிக்ச்சா காரரை பார்த்தேன் என்ற பதிவை பார்த்தவுடன் அந்த நகைச்சுவை நினைவில் வந்தது, ஆனால் இதயத்தில் இப்பொழுது சிரிப்பு அல்ல ரத்தம் …. !!!

நானும் தஞ்சையும் தொடரும் …..

தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு

Contact Us

For Immediate quires Please contact here...