In General

ராசராசேச்சரத்தை வியந்து பாடிய கருவூர்த் தேவர் !!!

நீண்டநாட்களாக எழுத நினைத்த ஒரு பதிவு அதற்கு இன்று தான் சமயம் அமைந்து உள்ளது, ஒரு வேலை இப்பொழுது தான் அதற்கு வேலை வந்தது என்று ராஜராஜ சோழன் மற்றும் கருவூர்த் தேவரின் அருளா ??? அல்லது அவர்கள் விருப்பமா என்று விளங்கவில்லை சரி விடயத்திற்கு வருவோம்

இன்று நாம் பெரியகோவில் என்று அழைக்கும்  ராசராசன் அமைத்த ராசராசேச்சரம் , தமிழர் கட்டிடகலையின் உச்சம் என்றால் மிகையல்ல. மலைகளே இல்லா ஒரு இடத்தில பெரிய பாறைகளை கொண்டு வந்து 213 அடி உயர கலைக் கோவிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைத்தது பெரிய அதிசயம் தானே . அந்த உழைப்பு ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்றும் வியக்க வைக்கும் ஒரு ஆண்மையின் கம்பீரம் என்றால் மிகையல்ல. இன்று நாம் பார்த்து வியக்கும் இந்த கோவிலையும், கோவிலின் மூலவரான ராசராசதேவரையும் தஞ்சை நகரின் அழகையும், வியந்து பாடிய கருவூர்த் தேவரின் பாடலை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

Thanjavur Big Temple

1860 ஆண்டு எடுக்கபட்ட படம்

கருவூர்த் தேவர் என்பவர் சைவ சமய குரவர்களில் ஒருவர். இவரின் பாடல்கள் சைவ சமய திருமறைகளில் 9 ஆம் திருமறையான திருவிசைப்பாவில் தொகுக்கப்பட்டு உள்ளது. இவர் வாழ்ந்த காலம் பற்றியோ, இவரின் பிறப்பு இறப்பு வாழ்க்கை பற்றியோ எந்த சான்றும் தமிழகத்தில் இல்லை. இவர் வாழ்ந்தார் என்பதற்கு நமக்கு இவரின் பாடல்கள் தவிர வேறு எந்த சான்றும் கிடையாது. ஆனால் இவரின் பாடல் சோழர் கால தஞ்சையின் அமைப்பை அறிய ஏதுவாக உள்ளது சரி இவரின் இலக்கியங்களில் ஒன்றான ராசராசேச்சரம் பாடலையும், அந்த பாடலின் வழியாக தஞ்சை நகரின் அமைப்பையும் காண்போம்.

தஞ்சை இராசராசேச்சரம்

162. உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி ஒன்றுநூ றாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ஙனே அழகிதோ, அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள் இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்(து) இவர்க்கே. ………….. (பாடல் எண் : 1 )

விளக்கம் : பெரிய மலையிடத்துச் சந்திரன் தவழ்வது போன்று பல போர்க் கருவிகளை தன்பாற் கொண்டதும், நீண்டு உயர்ந்ததும், பல அடுக்குகளை கொண்டதுமாகிய மாடங்களிலும், மேடைகளிலும்(சந்திரன்) தவழ்ந்து செல்கின்ற மதிலை கோட்டையாக பெற்றுள்ள தஞ்சாவூர்.

163, நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும் பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன இல்லை மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. …………………… (பாடல் எண் : 2)

விளக்கம் : அலைகளை உடைய வடவாற்றின் கண் அமைக்க பெற்றதாகிய தண்ணீர் பாயும் தலை மதகில் வாழ்கின்ற முதலைகள் மோதுகின்ற நீரழகியால் சூழப்பெற்ற தஞ்சாவூர்.

164. சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக் குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ கோங்கிணர் அனைய குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு) இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. ………………………………(பாடல் எண் : 3)

விளக்கம் : உதிர்ந்த மாணிக்க கற்களின் குவியல்கள் நிறைந்துள்ள இடமாக அமைந்துள்ள மாடங்கள் நிறைந்ததும் மதிலால் சூழபெற்றதுமாகிய தஞ்சாவூர்

165. வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம் வரிசையின் விளக்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழும் மாளிகை மகளீர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. …………………………….(பாடல் எண் : 4)

விளக்கம் : பளிங்கின் ஒரு சுடர் ஒளி படர்ந்து, காழகில் என்னும் மரத்தின் மனம் கமழும் மாளிகை, மங்கையின் சிரிப்பொலி, யாழின் இசை ஒலி, சிலம்பத்தின் ஒலி சூலபெற்ற தஞ்சாவூர்.

166. எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத் தவரும்மா லவனும் அறிவரும் பெருமை அடலழல் உமிழ்தழற் பிழம்பர் உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம் இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. .…………………………(பாடல் எண் : 5)

167. அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ(து) அழகோ தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. …………………………….. (பாடல் எண் : 6)

168. தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால் நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும் நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னே கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. ……………………………………. (பாடல் எண் : 7)

விளக்கம் : மலைசுனைகளை போல ஆழமுடையதும், பரப்பளவால், பெரியதும், தம்பால் நீராடும் மகளீரின் பல்வேறு வாசனை பொருள்களின் செரிகையால் கலங்கி இருபத்துமாகிய குளங்களில் மலர்ந்துள்ள ஆம்பற் பூக்களின் நறுமணம் கமழ்கின்ற மாளிகைகள் பிரகாசிகின்றதும் மதிலால் சூழபெற்றதுமாகிய தஞ்சாவூர்.

169. பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்நடம் பயிலும் இஞ்சுசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. ..………………………………… (பாடல் எண் : 8)

விளக்கம் : மின்னல் போன்று ஒளிவீசுகின்ற நீண்ட புருவத்தினை உடையவரும், இளமையிலை போன்ற பெண்கள் மலைபோல் உயர்ந்த பெரிய நாடக அரங்குகள் அழகாக நாட்டியமாடும் இடமானதும் மதில்கள் சூழபெற்றதுமாகிய தஞ்சை

170. மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார் அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல் அலர்கதிர் அனையவா ழியரோ ! பொங்கழில் திருநீறு அழிபொசி வனப்பில் புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர் எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. ……………………………………. (பாடல் எண் : 9)

171. தனியர்ஏத் தனைஓ ராயிர வருமாம் தன்மையர் என்வயத் தினராம் கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற் கட்டியர் அட்டஆர் அமிர்தர் புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு) இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. ……………………………………..(பாடல் எண் : 10)

172. சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவரை அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொல் மாலைஈ ரைந்தின் பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும் பொன்நெடுங் குன்றுடை யோரே. ………………………………..(பாடல் எண் : 11)

விளக்கம் : தேவதாரு, மாந்தாரம் சண்பகம் மகிழமரம் சந்தனமரம் ஆகியவை நிறைந்த சோலையின் இருள் பரவி இருக்கின்ற உச்சியினையுடைய மதில்களால், சூழபெற்ற தஞ்சை என்றெல்லாம் வரணித்துக் காட்டுகிறார் ..

இதுவே  கருவூர்த் தேவரின் பாடல், அவரின் பாடலை கூர்ந்து கவனித்தால் பல செய்திகள் புலப்படும், தஞ்சை பெரிய கோவிலை ராசராசன் ராஜராஜேச்சரம் என்று பெயர் சூட்டினான், கருவூர் தேவர் இந்த கோவிலை ராசராசேச்சரம் என்று அழைக்கிறார் , இலக்கணப்படி, கருவூர்த்தேவரின் வார்த்தையே சரியானது. அனைத்து பாடலிலும் இஞ்சி சூழ் தஞ்சை என்றே குறுப்பிடுகிறார், இதனால் அன்றைய தஞ்சை கோட்டை அகழி பெரிய மதில் சுவர் சூழ்ந்த நகரம் என்பதை அறியலாம். கங்கை கொண்ட சோழ புறத்தில் கோட்டை மதிலை அறிய சுவரின் மீதி சுவடுகள் இன்றும் இருப்பதால் அறிய முடிகிறது ஆனால் தஞ்சை நகரில் மதிலின் சுவடுகள் கூட இல்லை என்பதாதால் மதில் கோட்டை இருந்த இடத்தை சரி வர கண்டறிய முடியவில்லை.

ஆயினும் அவரின் பாடல் வரிகள் மூலமாக தஞ்சை நகரில் அன்றே வடவாறு ஓடியதும், அதில் மதகு இருந்தமையும், அவ் வடவாறே அகழி போல் இருந்தது என்பதும் புலனாகிறது. மேலும் தஞ்சை நகரில் உயர்ந்த மாட மாளிகைகள் இருந்தமையும், பெண்கள் நாட்டியமாடும் கலை அரங்கங்கள் இருந்தமையும் கருவூர்த் தேவரின் பாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

கருவூர் தேவர் பற்றிய சில செவி வழி செய்திகள்

1. கருவூர் தேவர் ராஜராஜ சோழனின் ராஜகுரு

2. ராசராசேச்சரத்தில் மூலவரை பிரதிட்டை செய்யும் வேலையில், மிக பெரிய இடர்பாடு வந்தாதாகவும், அந்த சமயத்தில் ராஜராஜன் இவரை நினைத்தவுடன் உடனே வந்து பிரதிட்டை செய்து கொடுத்தார்

3. கருவூர் தேவரே கோவிலை வடிவமைத்தவர்

4.கோவிலின் இரண்டாம் சுற்றில் உள்ள ஓவியம் கருவூர் தேவர் மற்றும் ராஜராஜன்

5. ராஜராஜன் தனது ராஜ குருவான கருவூர் தேவரை மதிக்காமல் குடமுழுக்கு செய்ய எத்தனித்தான் , இதனால்  கோவமுற்ற முற்ற கருவூர் தேவர் கோவிலையும், ராஜராஜனையும் சபித்தார், இதனால் மனமுடைந்த ராஜராஜன் கோவிலின் கோபுரத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்தான்

6.சாபத்தால் தான் இன்றுவரை குடமுழுக்கு நடைபெறவில்லை, 2000 ஆண்டில் நடந்தது கூட வெறும் நீரை தான் ஊற்றினார்கள்

 ச்ச்ச்ச்ச்ச்ச் அப்ப்பா  முடியல (என்னமா நீங்க இப்டி பன்றிங்கலேமா ??) போன்ற  பல்வேறு புரளிகளும் வதந்திகளும் தஞ்சையில் உலாவருகிறது.

சில வரலாற்று உண்மை

கருவூர்த் தேவர் என்பவர் ராஜராஜன், ராஜேந்திர சோழன் காலத்தில் தான் வாழ்ந்தார்,சோழ அரச குடும்பத்துடன் மிக நெருக்கமானவர்  என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.  சர்வசிவ பண்டிதர் தான் ராஜராஜ சோழனின் ராஜ குரு என்பது  மிக தெளிவாக பெரிய கோவில் கல்வெட்டில்  உள்ளது, மேலும் ராஜராஜன் கருவூர்த் தேவர் என்று சொல்லப்படும் ஓவியமும் சனகாதி முனிவர்கள் தான் என்பது தொல்லியல் அறிஞர்களின் கருத்து. பெரிய கோவில் கட்ட ஒரு சிறிய உதவி செய்தவரின் பெயரை கூட மறக்காமல் சொல்லப்பட்டு இருக்கும் பொழுது. மூலவரை பிரதிட்டை செய்த மாபெரும் பணியை கருவூர் தேவர் செய்து இருந்தால் அதை குறுப்பிடாமலா இருந்து இருப்பார்கள் ???. சரி ராசராசன் தான் தவறி விட்டான் பெரிய கோவிலுக்கு பிறகு எழுப்பபெற்ற கங்கை கொண்ட சோழ புரத்திலாவது கருவூர்த்  தேவரின் பெயர் இருக்கிறதா என்றால் அங்கும் இல்லை. ஏன் தமிழகத்தில் எந்த கோவிலிலும் கல்வெட்டோ, குறிப்போ, சான்றோ சிற்பமோ கிடையாது என்பதே உண்மை.

சனகாதி முனிவர்கள்

சனகாதி முனிவர்கள்

தீவிர சிவ  பக்தனான ராஜராஜன் சைவ சமைய கோட்பாட்டில்   வான்கயிலாயம்  எப்படி   இருக்கும்  என்பதை படித்து, அந்த கற்பனையை நம் கண் முன் மெய்யாக காட்ட விரும்பிய முயற்சியே ராசராசேச்சரம். அந்த  வான்கயிலாய காட்சியை அப்படியே கோவிலின் மேல் அமைத்து  நம் கண்ணுக்கு விருந்தாக்கியுள்ளார். மேலும் சுந்தரர் வரலாறும் கோவிலில் உண்டு. ராஜராஜன் எத்தனை பெரிய  கலா ரசிகன் என்பதற்கு இவையெல்லாம் உதாரணம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சிவனை பற்றியும் சிவனடியாரின் வரலாற்றை பற்றியும் சிற்பமாக  வடித்தவன் , அவன்  வாழ்ந்த காலத்தில்  சிவனடியாராகவும்  சித்தபுருசனாகவும், தனது குருவாகவும் கருவூர்த் தேவர் வாழ்ந்து இருந்தால் அவரை பற்றி  சொல்லாமல் விட்டு  இருப்பானா ??

ராசராசேசுரத்தில்  உள்ள வான் கைலாய காட்சி

ராசராசேசுரத்தில் உள்ள வான் கைலாய காட்சி

தஞ்சை பெரிய கோவிலில் தற்பொழுது உள்ள கருவூர்த்தேவரின் கோவில் இருபதாம் நூற்றாண்டில் அதாவது 1900 ஆம் ஆண்டிற்கு பிறகு அமைக்க பட்ட கோவிலாகும். மேலும் ராசராசேச்சரம்  சபிக்க பெற்ற ஒரு கோவிலாக இருந்து இருந்தால் சோழர்களுக்கு பிறகு வந்த பாண்டியர்கள், பெரியகோவிலில் உமையம்மை ஆலயத்தை கட்டி இருப்பார்களா?? ஒரு லட்சம் பேர் கொண்ட மாலிகபூர் படை முயன்றும் விமானத்தின் முன் மண்டபத்தை தவிர எதையும் சேதபடுத்த முடியாமல் அவர்களை பின் வாங்க செய்து  அன்று அவர்களுக்கு தமிழரின் ஒப்பற்ற கட்டிட   கலை திறனை உணர்த்தியது ராசராசேச்சரம் . மாலிகபூரால் சேதமான பெரியகோவில் விமான மகாமண்டபத்தை சீரமைத்து, சுப்பிரமணியர் ஆலயம், நடராஜர் மண்டபம், மிக பெரிய நந்தி உள்ளிட்டவற்றை அமைத்தார்கள்   நாயக்க மன்னர்கள். சபிக்கப்பட்ட ஒரு கோவில் என்றோ, ஆட்சியில் இருப்பவர்களுக்கு  ஆபத்து என்ற வதந்தியோ, செய்தியோ, நம்பிக்கையோ அன்று இருந்து இருந்தால் இந்த பணிகளை செய்து இருப்பார்களா நாயக்கர்கள் ??? அல்லது மராட்டியர்கள் தான் வீரசிங்கம் பேட்டையில் இருந்து , அழிந்து போன ஆயிரம் தளி ஆலயத்தில் இருந்த 108 சிவலிங்கங்களை கொண்டு வந்து பிரதிட்டை செய்து, விநாயகர் ஆலயம் தான் கட்டி இருப்பார்களா ???

குடமுழுக்கு நடைபெற்றதை சொல்லும் மராட்டியர் கால சாசனம்

குடமுழுக்கே  நடைபெறவில்லை என்ற வாதத்திற்கு வருவோம், இத்தனை பெரிய கோவில் கண்டிப்பாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்து இருக்க வாய்ப்பே இல்லை, இது சபிக்க பட்டது என்பதற்கோ, குடமுழுக்கு நடைபெறவில்லை என்பதற்கோ ராஜராஜன் காலத்தில் மட்டும் அல்ல அதற்கு பிறகு வந்த சோழர்களின் காலத்தில் கூட எந்த செய்தியும் இல்லை. மேலும் பிறகு வந்த மன்னர்கள் காலத்திலும் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது, இந்த கோவிலை முறையாக பராமரிக்க ராஜேந்திரன் வழங்கிய நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டும் பெரிய கோவிலில் உண்டு . கோவிலை புனரமைத்த நாயக்கர்கள் குடமுழக்கு நடத்தாமல் விட்டு இருப்பார்களா??? மேலும் மராட்டியர்கள் குடமுழுக்கு நடத்தியதற்கு சான்றுகள் உள்ளது அதை பார்ப்போம்.

தஞ்சை பெரியகோவில் விமானத்தில் உள்ள மராட்டியர் கால சாசனத்தின் வாயிலாக மராட்டியர் காலத்தில் நடைபெற்ற குடமுழுக்கு பற்றி அறிய முடிகிறது. தஞ்சை மராட்டிய மன்னர் முதலாம் சரபோஜி காலத்தில் பெரிய கோவில் திருப்பணி செய்யபெற்று குடமுழுக்கு கி பி 1729 ஆம் ஆண்டு, விமானத்தின் உச்சியில்  இருந்த பழைய கலசத்தை  எடுத்துவிட்டு புதிய  கலசம் வைக்கபெற்று அதில் ரா ரா சரபோசி மகாராசா உபையம் என பெயர் கலசத்தில் எழுதப்பட்டு குடமுழுக்கு செய்து உள்ளார்கள். மேலும் இந்த சாசனத்தில் கடைசி சிவாஜி மன்னர் காலத்தில் 7.9.1843 அன்று நிகழ்ந்த குடமுழுக்கை பற்றிய செய்திகளும் தமிழ் கிராந்த எழுத்துக்களில் கல்வெட்டில்  பொறிக்க்பட்டு உள்ளன.

மேலும் 2000 ஆம் ஆண்டில் கலசத்தை கழட்டி கீழே   எடுத்து வந்ததை நேரில் பார்த்தேன்.  நவதானியங்கள் நிரம்பிய கலசம் ஏன் வைக்கபடுகிறது கதிர் வீச்சை சமாளிக்க , 12 ஆண்டுகாலம்  தான் அதன் சக்தி இருக்கும் அதனால் தான் மாற்றபடுகிறது. ஆகவே 2000 ஆம் ஆண்டு கலசம் கழடபட்டு தானியங்கள் நிரப்பி மீண்டும் பொருத்தினார்கள் இது ஒரு முழுமையான குடமுழுக்கு தான். நாம் கண்ணால் கண்டதை கூட ஒரு சிலர் அது  குடமுழுக்கு அல்ல என்று பேசுவதை கேட்டு நகைக்காமல் இருக்க முடியவில்லை.

கருவூர்த் தேவர் வாழ்ந்த காலம் 

கருவூர்த் தேவர் தஞ்சை ராசராசேசுரத்தை பற்றி மட்டும் அல்ல ராஜேந்திர சோழன் அமைத்த கங்கை கொண்ட சோளிச்ச்சரம் பற்றியும் பாடல் பாடி உள்ளார். கங்கை கொண்ட சோளிச்ச்சரம், ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது. அவரின் பாடல்களில் மாட மாளிகை என சுறுசுறுப்பாய் தஞ்சை நகரம் இருந்த பொழுதே தஞ்சை நகரில் அவர் வந்து பாடல்களை பாடி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.ராஜராஜனுக்கு பிறகு 1014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஜேந்திர சோழன் வடக்கே பகைவர்களை வீழ்த்த ஏதுவாக தனது தலை நகரத்தை தஞ்சையில் இருந்து கங்கை கொண்ட சோழ புறத்திற்கு மாற்ற தீர்மானித்து 10 ஆண்டுகளில் அங்கே ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்குகிறார். தலை நகரம் மாறிய பின்பு தஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக தன் பொலிவை கண்டிப்பாக இழந்து தானே இருக்கும் ???

இருண்ட தஞ்சையை மீண்டும் பொலிவு பெற செய்தது நாயக்கர் ஆட்சிகாலத்தில்.. ஆனால் கருவூர் தேவர் நாயக்கர் காலத்தில் பாடல்களை இயற்றி இருக்க வாய்ப்பு இல்லை என்பதை “மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை “ என்ற அவரின் பாடல் வரிகள் மூலம் தெளிவாக அறியலாம். ஏன் என்றால் நாயக்கர் கால கோட்டையும் அகழியும் வடவாறு வரை இல்லை என்பதை இன்றும் நாமே தெளிவாக காணலாம். கண்டிப்பாக தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்க பட்ட பிறகு தான் இந்த பாடலை அவர் பாடி இருக்க வேண்டும். அவர் தஞ்சை வரும் பொழுது தஞ்சை ஜே ஜே என்று இருந்ததை அவர் பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது. அத்தனை  சுறுசுறுப்பாய் தஞ்சை நகரம் இயங்கியது தலைநகராய் இருந்த பொழுது தான், பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளில் அதவாது 1014 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் இறந்தார், அதன் பிறகு ராஜேந்திர சோழன் தஞ்சையில் 10 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தார். பிறகு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரம் மாற்றப்பட்டது.

ஆகவே கருவூர்த் தேவரின் இந்த பாடல் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தின் இறுதியில் அல்லது ராஜேந்திரன் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் தஞ்சை தலைநகராக இருந்த பொழுது இயற்றி இருக்கலாம்  ஆகவே, அவர் ராசராசேச்சரம் பாடலை ராஜேந்திர சோழன் ஆட்சிகாலத்தில் பாடி இருக்கலாம்.  கருவூர் தேவர் ராஜராஜ தேவர் காலத்தில் வாழ்ந்தாரா இல்லையா என்பதை அறுதியிட்டு கூற முடியாவிடினும், ராஜராஜன் காலத்திற்கு  பிறகும் அவர் வாழ்ந்து இருக்கிறார் என்பதை அவர் பாடிய  கங்கை கொண்ட சோளிச்ச்சரம் பாடலின்   வாயிலாக தெளிவாக உணர முடிகிறது.

உண்மையில் அவரை பற்றிய பல வததிகளுக்கு வயது ஒரு 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்காது. ஏன் என்றால் தஞ்சை பெரியகோவிலை கட்டியதே ராஜராஜன் தான் என்பதை தஞ்சை வாசிகளுக்கே சொல்ல, 1892 ஆம் ஆண்டு ஜேர்மன் கல்வெட்டு அறிஞர் ஹீல்ஸ் வர வேண்டி இருந்தது. மேலும் இது போன்ற வதந்திகள், புரளிகள்  செய்திகள் பாண்டிய, நாயக்க, மராட்டிய காலத்தின் கல்வெட்டுக்களிலோ, நூல்களிலும் இல்லை. ஆகவே இந்த வதந்திகளுக்கு வயது 100 வரை தான் இருக்கவேண்டும். மேலும் கருவூர் தேவர் அருளிய பாடல்களை பாடி, அந்த தமிழ் இலக்கியத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டியதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான தொண்டு அதை விடுத்தது அவர் சபித்தார், பழித்தார் போன்று வரலாற்றிலே இல்லாத புரளிகளை பரப்பி அவரை “சூப்பர் மேனாக” சித்தரிக்க நீங்கள் செய்யும் முயற்சிகள்   அவரின் பெயருக்கு களங்கம்  விளைவிப்பதாகவே அமையும் …

சோழம் ! சோழம் !! சோழம் !!!

பி கு : உரிய பதில் கூற விரும்புவோர் தமிழ் இலக்கியம், செப்பேடுகள், கல்வெட்டு ஆதாரத்தோடு உள்ள தகவல்களை மட்டும் கூறுங்கள், செவிவழி செய்திகள் ஏற்புடையதல்ல 

குறிப்புக்கள் : குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா எழுதிய தஞ்சாவூர் நூல்களில், இருந்து இன்னும் பிற வரலாற்று தகவலில் இருந்தும். கருவூர் தேவரின் திருவிசைப்பா பாடலில் இருந்தும் எடுத்து தொகுக்கப்பட்டவை.

இதை பற்றி நிறைய விவாதங்கள், உரையாடல்கள் தகவல்களின் வாயிலாக பல உண்மைகளை புரியவைத்து, இதில் உள்ள வரலாற்று பிழையை சரி செய்து வழங்கிய நண்பர் சசிதரனுக்கு என் நன்றிகள்

         

நன்றி

“தஞ்சை மைந்தன்” கணேஷ் அன்பு

Showing 15 comments
 • Reply

  சந்திர சூரியன் உள்ளவரை தென் கயிலாயமாக விளங்கும் பெருவுடையார் கோவிலும் நம் மாமன்னன் இராசராசன் பெயரும் புகழும் நீங்காமல் நிலைத்திருக்கும்…
  சோழம்..சோழம்…

 • DrRavi Pachaiyappan
  Reply

  SUPERB ANBU

 • Muthu Kumar
  Reply

  Congrats Anbu. Well done.

 • Muthu Kumar
  Reply

  In udaiyar novel also has some mystery of karurar thevar. But ur Eassy is correct. I agreed fully with you.

 • Satheesh Kumar
  Reply

  nice

 • Aasai Thambi
  Reply

  well u spread over my thoughts

 • Reply

  Very interesting research and sharing

 • Karthik Sivaraman
  Reply

  தாங்கள் குறிப்பிட்ட பாடல்கள் இருந்தும் கூட, நம்முடைய வரலாற்றை ஆங்கிலேயர் வந்து தான் தெரிந்து கொள்ளும் நிலையில் நாமுள்ளோம் என்பதை உணர்ந்தாலே போதும்.

 • Reply

  நல்ல பணி ! கல்வெட்டு சொல்வது :
  ++++++++++++++++++++++++++
  “உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு ………….
  (இராஜராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)
  ௧. " ராஜராஜீச்வரம் உடைய பரஸ்வாமிக்கு " /
  ௨. "உடையார் என்றும் அவன் அழைக்கப்பட்டான்"
  ௩. " பெரு உடையார் கோயில் / பெரிய கோயில் எனவும் ….. அழைக்கப்பட்ட / அழைக்கப்படுகிற ……..கோயில்

  " பிரகதீஸ்வரர் கோயில்" என பெயர் மாற்றம் யாரால் ?
  மராட்டிய நூல் " தஞ்சாவூர் மகாத்மியமும், சமக்ருதநூல் " ப்ரஹதீசவர மகாத்மியமும்" ……….அழைப்பது ? கட்டியவன் கிருமிகண்ட சோழன் என்பது ?
  ஏன் ? இன்றும் மும்பையில் வெளிவரும் "அமிர்த கதா பத்ரிகா"- Oxford & IBH என்ற உலகத் தரம் வாய்ந்த வெளியீட்டில் "THANJAVUR – A City of Brahadeeswara " என்ற நூலில் தஞ்சைப் பெரிய கோயிலைப்பற்றிக் கேவலமாக எழுதப்பட்டுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும் ? நம் வரலாறு திரிக்கப்பட்டு உலகம் முழுதும் இந்த கேடுகெட்ட நூல் விற்கப்படுகிறது. தெரியுமா ? என்ன செய்தோம் ? என்ன செய்ய முடியும் ?
  பெருவுடையார் கோயிலோ, பெரிய கோயிலோ , கோயிலைக் கட்டிய மன்னன் வைத்த பெயர் ராஜராஜீச்சுரமோ இல்லை ! கட்டியவன் யார் ? ராஜராஜன் இல்லை ! பின் யார் ? குட்ட ரோகம் பிடித்த "கிருமிகண்ட சோழன்" கட்டினான் . சிவகங்கைக் குளத்தில் மூழ்கி குட்டரோகம் போனதால் பிரகதீஸ்வர கோயிலைக் கட்டினான் என்றெல்லாம் நம் கண் முன்னே புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள். ஆங்கில வழி படிக்கும் நம் பிள்ளைகள் நம் சொல் கேட்பார்களா ? ஏற்பார்களா ? இணைப்பைக் காண்க : http://www.amarchitrakatha.com/in/thanjavur

 • Ganesh Anbu
  Reply

  ராஜராஜேச்சரம் மட்டும் அல்ல தமிழகத்தின் அனைத்து புராதான சின்னங்களின் கல்வெட்டு படியெடுத்து தமிழர் வரலாற்றை சொன்ன பெருமை ஆங்கிலயர்களை சாரும், அவர்கள் படி எடுத்ததை தான் இன்று தொல்லியல் துறை வைத்து இருக்கிறது … விண்ணை முட்டும் கட்டிடம் ஆதலால் இதுவும் இன்னும் பல சின்னங்கள் வெளிபடுத்திக் கொண்டது இன்னும் நாம் கண்டறியாமல் விட்டவை, ஆக்கிரமிப்பில் அழிந்து கொண்டு இருப்பவை ஏராளம்

 • Raman K
  Reply

  அருமை

 • Ganesh Anbu
  Reply

  ராசராசேச்சரத்தை வியந்து பாடிய கருவூர்த் தேவர் !!!

 • Reply

  அருமையான ஆராய்ச்சி கட்டுரை தஞ்சை மைந்தரே.

 • Reply

  "மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது" என்பது போல் வரலாற்றை சிறிதாகவும்…கருத்தில் பெரியதாகவும் படைத்துள்ளீர்.

  வாழ்க, வளர்க சோழவம்சம்…
  வாழ்க வளமுடன்…
  வாழ்வோம் வளமுடன்…

 • Naga Rajan
  Reply

  எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமத்திற்கு (வழுவதூர் )1008 ம் ஆண்டில் வந்து சென்றுள்ளார் மாமனார் ராஜராஜர். மற்றும் கோவிலுக்கு பல உதவிகளை செய்து உள்ளார். கல்வெட்டுகள் கிடைத்தது. ஆராய்ந்து கூரியது கோவை தொல்பொருள் ஆய்வாளர்கள். சென்ற மாதம் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Contact Us

For Immediate quires Please contact here...

Not readable? Change text. captcha txt