ஓவிய ஆர்வலர்கலர்களுக்கும் , வரலாற்று அறிஞர்களுக்கும் ஒரு முடிவு காண இயலாதவாறு சர்ச்சைக்குரிய ஓவியமாய் திகழ்வது ராசராசனும் கருவூர்த் தேவரும் எனக் கூறப்படும் ஓவியமாகும். இக்காட்சித் தொகுப்பில் நால்வர் உருவங்கள் உள்ளன.மூவர் தாடியுடனும் ஒருவர் தாடியின்றியும் உள்ளனர். நால்வரும் சடா முடியுடனும் திகழ்கின்றனர். மூவருடைய தாடியும் மீசையும் வெண்மையாக நரைத்து முதுமையை பறைசாற்றுகின்றன. ஒருவரது முகம் மீசை கூட இல்லாமல் இளமையாய் உள்ளது. நீள்செவிகள் எளிமையாக கழுத்தணிகள், வலது தோளிலிருந்து இடப்புறம் குறுக்காக இறங்கும் வெண்துகிலான உத்திரியம் ஆகியன காட்டப்பட்டு உள்ளன. இது பூணுல் அல்ல, யோகப்பட்டம் என்னும் மேல் வேஷ்டியே என்பது உறுதி. இவர்களின் கை விரல்கள் யோகநிலை காட்டும் சின்முத்திரை போன்று ஒரு மலரைப் பித்துள்ளன. மற்றுமொரு கரத்தில் ஜலகெண்டி ஏந்தியுள்ளனர்.
இந்த நால்வரில் இருவரை மட்டும் கருத்திற் கொண்டு ராசராசனாகவும் கருவூர்த் தேவராகவும் கொள்வது அவ்வளவு பொருத்தமாக இல்லை. அனைத்துச் சிற்ப நூல்களும் மன்னர்களின் உருவங்களை காட்டும்பொழுது ஜடாமகுடம் காட்டுதல் கூடாது என்பதை தெளிவாக கூறுகின்றன. இங்கோ மிகப்பெரிய ஜடாமகுடம் தெளிவாகக் காட்டப்பெற்று உள்ளது. வேறு எங்கும் ஓவியத்திலோ சிற்பதிலோ மன்னர்களுக்கு ஜடாமகுடம் காடப்பெற்றதாக இதுவரை ஒரு சான்று கூட எங்கும் கிடைக்கவில்லை. இது ஒன்றே இந்த ஓவியம் ராஜராஜன் அல்லன் என்பதற்கு போதுமான சான்றாகும்.
அடுத்து தஞ்சை பெரியகோவிலில் ராசராசனோடு தொடர்புடைய ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்களை காண்கிறோம். இவற்றில் கருவூரார் பெயர் ஏன் குறிக்கப் பெறவில்லை என்பது பொருள் பொதிந்த வினாவாகும். அத்துடன் ராசராசனது ராஜகுருவாக திகழ்ந்தவர் சர்வசிவ பண்டிதவரே என்பதனை தஞ்சை கோவில் கல்வெட்டுக்கள் தெளிவாக கூறுகின்றன. இக்காரணங்களால் ஓவியத்தில் காணப்படும் முதல் இருவரையும் ராசராசனாகவும் கருவூர்த் தேவராகவும் கொள்வது பொருத்தம் ஆகாது.
மூர்த்தி தியானம் எனும் நூல் சநகாதி முனிவர்கள் பற்றி கூறுகின்றது.ஸ்நகர், ஸ்நந்தனர்,ஸ்நாதனார், ஸ்நத்குமாரர் என்ற நால்வருக்கும் தியான ஸ்லோகங்கள் கூறும் போது ஸ்நகர் பாலரூபத்தை உடையவர் என்றும், மற்ற மூவரும் தாடி மீசைகளுடன் வயோதிகராய்த் திகழ்பவர்கள் என்றும் கூறுகிறது. இந்த அடிப்படையின் நோக்கும் போது இங்குக் காணப்பெறும் முதியவர் மூவரும் முறையே ஸ்நந்தனர்,ஸ்நாதனார் ஸ்நத்குமாரர் என்பதும் இளமையாக விளங்குபர் ஸ்நகர் என்பதும் நன்கு விளங்கும். எனவே முதலில் உள்ள இருவரை ராசராசன்,கருவூர்த் தேவர் என்று கூறுவதை விட ஸநகாதி நால்வர் எனக் கொள்வதே சமய மரபிற்கு பொருத்தமாகும்
மேற்கூறிய செய்தி குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் தஞ்சாவூர் நூலில் இருந்து எடுக்கப்பட்டது
ராஜராஜன்- கருவூறார் ஓவியங்களா ??ஓவிய ஆர்வலர்கலர்களுக்கும் , வரலாற்று அறிஞர்களுக்கும் ஒரு முடிவு காண இயலாதவாறு…
Posted by Thanjavur on Wednesday, 28 May 2014
நன்றி
கணேஷ் அன்பு