January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / சோழர்கள் முடிவும் , ராசராசேசுரத்திற்கு நிகழ்ந்த பேரழிவும் !!!!

சோழர்கள் முடிவும் , ராசராசேசுரத்திற்கு நிகழ்ந்த பேரழிவும் !!!!

1

தஞ்சாவூர் பன்னெடும் காலமாய் உயிர்போடும், உணர்வோடும் இயங்கும் ஒப்பற்ற நகரம். கலைக்கொரு மகுடமாகவும், தமிழ் மொழிகொரு சிகரமாகவும் விளங்கும் நம் தஞ்சையை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இன மன்னர்கள் ஆண்டு வந்தார்கள், இதில் இன்றும் தங்கள் பேர் சொல்லும் அளவிற்கு ஆழமாக தங்களின் தடம் பதித்தவர்கள் சோழர்கள். கி பி 850 ஆம் ஆண்டு முத்தரையர்களை வீழ்த்தி விஜயாலய சோழன் தஞ்சை நகரை கைப்பற்றினான், பல காலம் சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சையில் இருந்து முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தலை நகரம் கங்கைகொண்ட சோழ புறத்திற்கு மாற்றப்பட்டு பல காலம் சிறப்பான ஆட்சியை சோழ மன்னர்கள் வழங்கி உலகமே வியக்க ஆட்சி புரிந்தார்கள், இந்த சோழ வம்சத்தின் முடிவை பற்றியும், தஞ்சையில் ராஜராஜ சோழன் எழுப்பிய ராசராசேசுரத்தில் நிகழ்ந்த பேரழிவை பற்றியும் தஞ்சை நகரின் அழிவை பற்றியும் காண்போம் ..

மூன்றாம் ராஜராஜன் காலத்தின் சோழர்களுக்கும், மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையின் வந்த பாண்டியர்களுக்கும் மிகபெரிய போர் கி பி 1218 ஆம் ஆண்டு நடைபெற்றது, இதில் பாண்டியர்கள் வென்று தஞ்சை நகரை ஏரியூட்டி கழுதை கொண்டு உழுது வரகு விதைத்தார்கள் . பின்னர் மூன்றாம் ராஜராஜனுக்கு பொன்னமராவதியில் மீண்டும் சோழ நாட்டை வழங்கிச் சோனாடு “தந்தருளிய சுந்தரபாண்டியன்” என்று பெயர்பெற்றான். பின்னர் மீண்டும் சண்டையிட்டு நாடிழந்து மூன்றாம் ராசராசன் , காடவராயன் கோப்பெருஞ்சிங்கனால் சிறைவைக்கப்பட்டு, போசள ராசன் நரசிம்மனின் உதவியால் மீண்டு, சோழ ஆட்சியை மீண்டும் நிறுவினான் , இவனுடைய மகனான மூன்றாம் ராஜேந்திரன் முதலில் பாண்டியர்களை வென்றாலும் பின்னர் கி பி 1257 ஆம் ஆண்டு நடந்த போரில் முதல் சடையவர்ம சுந்தரபாண்டியனால் தோல்வி அடைந்து, கப்பம் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டான். கி பி 1279 ஆம் ஆண்டு மூன்றாம் ராஜேந்திரனின் மரணத்தோடு , கி பி 850 ஆம் ஆண்டு முத்தரையர்களை வீழ்த்தி விஜயாலயன் நிறுவி கிட்ட தட்ட 400 ஆண்டுகள் தொடர்ந்த சோழர் அரசு முடிவுக்கு வந்தது..

சரி இப்பொழுது ராஜராஜ சோழனும் அன்றைய சோழ மக்களின் கடுமையான உழைப்பில் அமைக்கப்பட்ட உலகிற்கே தமிழரின் கட்டிடக்கலையை கம்பீரத்துடன் பறைசாற்றும் ராசராசேசுரம் கண்ட பேரழிவை பற்றி காண்போம். இன்று நாம் காணும் பெரியகோவில் விமானம் ராஜராஜன் கண்ட அமைப்பில் பாதி தான் என்றால் நம்பமுடிகிறதா ??? என்ன படித்தவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா?? ஆம் இது உண்மை தான் நாம் இன்று காணும் விமானம் ராசராசன் கண்டத்தில் பாதி தான்.. இன்று நாம் காணும் பெரியகோவிலின் விமானம் பெரிய பேரழிவை சந்தித்து நல்ல வேலையாக, ஒரு பகுதி மட்டுமே சேதம் அடைந்து மீதம் உள்ள பகுதிகளாவது நாம் காண மிச்சம் இருப்பதே ஆறுதலான விடயம் தான். சரி எப்பொழுது விமானம் பேரழிவை சந்தித்தது என்பதை பற்றி பார்போம்.

தஞ்சை பெரியகோவிலில் பேரழிவை சந்தித்தது திருசுற்று மாளிகை, அதில் இருந்த பரிவார ஆலயங்கள், உள்ளிருந்த தெய்வ திருவுருவங்கள், தஞ்சை கோவிலை சுற்றி எட்டு சப்தகன்னிகள் நிருவபெற்றது, அதில் வராகி அம்மனை தவிர வேறு எதுவும் இன்று இல்லை. இவை மட்டும் தானா??? நாம் இன்று காணும் விண்ணை தொடும் பெரிய கோவில் விமானமும் பெரிய அழிவை சந்தித்தது. இன்று நாம் ஒரு தளத்தோடு காணும் மகாமண்டபம் உண்மையில் ராஜராஜன் காலத்தில் அமைக்கப்பட்ட பொழுது இரண்டு அடுக்காக இருந்தது. இந்த இரண்டு அடுக்கு மகாமண்டபம் மிகபெரிய பெரிய அழிவை சந்தித்தது. அந்த பழைய அமைப்பை படத்தில் காணலாம்.

பெரியகோவிலின் பெரு மண்டபம் இடிந்து சீரழிந்து இருந்ததை பிற்காலத்தில் பிரமிச்ச நாயகர் போன்ற சிலரின் முயற்சியால் இடிந்து கிடந்த பிற கோவில்களின் கற்களை கொண்டு வந்து மகாமண்டபம் புதுப்பிக்கப்பட்டது என்பதை கோவில் கல்வெட்டு உணர்த்துகிறது . ராஜராஜன் காலத்தில் இரண்டு அடுக்குகளுடன் அமைக்கபெற்ற மகா மண்டபம், அழிவிற்கு பின் மகாமண்டபத்தின் நடுவே ஒரு குறுக்கு சுவர் எழுப்பபேற்று ஒரு தளத்தோடு திருப்பணி நின்று விட்டது. முதல் தளத்திற்கு மேலே வைக்கப்பட்ட குறுக்கு சுவர்கள் பல்லவர்கள் காலத்து “தஞ்சாவூர் பிரம்மன்குட்டம் எனும் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட கற்களில் அமைக்கப்பட்டது. இவ்வாறு புதுபிக்க பட்ட மகாமண்டபத்தில் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட கோவில் கற்களில் தந்தி வர்ம பல்லவர், குத்தவை, சுந்தரசோழன் உள்ளிட்டவர்களின் கல்வெட்டுக்கள் உள்ளது.

10981858_1051532138206751_9143641396960219894_n

கி பி 1218 ஆம் ஆண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சை நகரை ஏரியூட்டி அழித்தான் என்று முன்னவே சொன்னோம், அந்த பாண்டிய மன்னனால் தஞ்சை ராசராசேசுரம் ஏதேனும் பாதிக்கப்பட்டதா ?? என்ற உங்களின் என்ன ஓட்டங்களை புரிந்து கொள்ள முடிகிறது.அப்படி நடந்து இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் சோழர்கலாயினும், பாண்டியர்கலாயினும் போரிட்டு ஒரு நகரத்தை அழிக்கும் பொழுது, அந்த தலை நகரத்தின் கருவூலத்தில் இருந்து கைப்பற்றும் அத்தனை பொருட்களையும் அங்கே உள்ள ஆலயங்களுக்கே தான் கொடுத்து உள்ளனர்.. அதற்கு ஒரு உதாரணம் குலோத்துங்க சோழன் மதுரையை அழித்த பொழுது ஆலைவாய்ப் பெருமானுக்கே அத்தனையும் கொடுத்தான் என்பது வரலாறு ஆகவே அது போன்றே சோழநாட்டை அழித்த சுந்தர பாண்டியன் தில்லை அம்பலவாணன் திருவடியிலே அத்தனை செல்வங்களையும் கொட்டினான்.

மேலும் பெரியகோவிலில் உள்ள பெரியநாயகி சன்னதி பாண்டியர்கள் காலத்திலே அமைக்கப்பட்டது என்பதை அந்த கோவில் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது ஆகவே கண்டிப்பாக பெரியகோவிலின் அழிவிற்கு பாண்டியர்கள் காரணமாக இருக்க முடியாது. பிறகு இது எப்பொழுது நிகழ்ந்தது என்று பார்க்கும் பொழுது கி பி 1311 இல் நிகழ்ந்த மாலிக் கபூர் படையெடுப்பில் தான் நிகழ்ந்து இருக்கும் என்பதை பல்வேறு சாத்திய கூறுகள் மூலம் உணர முடிகிறது . தஞ்சையில் இருந்து 10 கி மி தொலைவில் உள்ள கண்டியூரில் 15 நாட்கள் தங்கிய லட்சக்கணக்கான முகமதிய படையினர் நந்திபுர நகரத்தை அழித்து கொள்ளையடித்து சூறையாடினார்கள் மேலும் சுற்று புற ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியத்தை அமீர்குஸ்ருவின் பார்சிய மொழி குறிப்புக்கள் மிக தெளிவாக காட்டுகிறது.

தஞ்சையை பாண்டியர்கள் அழித்தபிறகு தஞ்சையில் பெரிய கோவில் உள்ளிட்ட சில கோவில்களை தவிர வேறு எதுவும் இல்லை நகரமே முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது, பிறகு சுந்தரபாண்டியன் நந்திபுரத்து அரண்மனையிலும், பழையாறை அரண்மனையில் இருந்தும் பல ஆணைகள் பிறப்பித்ததை சான்றுகள் மூலம் அறியமுடிகிறது, ஆகவே அழிவுற்ற தஞ்சைக்கு அருகே இருந்த நகரம் என்றால் அது நந்திபுரம் தான் இந்த நந்திபுரம் தஞ்சையில் இருந்து 10 கி மி தொலைவில் இருந்தது அதாவது இன்றைய கண்டியூருக்கு அருகில் தான் ஆகவே, நந்திபுரம் வரை வந்த முகமதிய படை தஞ்சையில் பார்த்த இந்த பிராமாண்ட படைப்பை தாக்கி இருக்க கூடும்.

இதில் தமிழர்கள் பெருமை பட வேண்டியது மாலிகபூர் படை பல இடங்களை சிதைத்தாலும் ஒரு லட்சம் பேர் கொண்ட அந்த படையினால் கூட முழுதும் கோவிலை சேதபடுத்த முடியவில்லை நந்தி அஷ்டகன்னிகள், ஆடவல்லான், பெரியகோவில் விமான மகாமண்டபம் மட்டுமே சிதைவுற்றது விமானம் பிழைத்தது, கால வெள்ளத்தாலும், பல வீரர்கள் சேர்ந்து சிதைவு செய்தாலும் இனமும் நிமிர்த்து நிற்கும் கட்டிடக்கலையை தந்தது நமது தமிழர்கள் என்று பெருமை கொள்வோம்

சேதம் இருந்தாலும் 1000 வருடங்கள் கடந்தாலும், ராசராசேசுரம் விண்ணை தொட்டு கம்பீரமாக நின்று உலகத்திற்கு உணர்த்துவது ராசராசன் எனும் மன்னனின் பெருமையை மட்டும் அல்ல தமிழரின் பெருமையையும் தான்..

குறிப்புக்கள் குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயாவின் தஞ்சாவூர் நூலில் இருந்து எடுக்கப்பட்டது

பதிவின் மகிழ்வில்
தஞ்சை மைந்தன் கணேஷ் அன்பு

‪#‎Thanjavur‬ ‪#‎ganeshanbu‬ ‪#‎Chola‬ ‪#‎Rajaraajacholan‬ ‪#‎Sundarapandiyan‬‪#‎Pandiya‬ ‪#‎malikafurInvasion‬

https://www.facebook.com/Thanjavur/posts/1051566544869977:0

Comments

  • Jegadeeswaran Natarajan
    Reply

    மிக்க நன்றிங்க. பல சந்தேகங்கள் இந்த அமைப்பினைப் பற்றி இருந்தது. அத்தனையும் தீர்ந்தது. சோழப் பேரரசின் பெரும் செல்வம் படாதபாடுபட்டு நமக்கு கிடைத்திருக்கு.

Contact Us

For Immediate quires Please contact here...