October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பஞ்சவன் மாதேவிச்சரம் வரலாறு !!!!!

பஞ்சவன் மாதேவிச்சரம் வரலாறு !!!!!

2

பஞ்சவன் மாதேவிச்சரம் வரலாறு !!!!!

சோழப் பெருமன்னர்கள் வரிசையில் திலகமென திகழ்ந்த முதலாம் ராஜராஜனின் மனைவியே இந்த பஞ்சவன்மாதேவி.இவர் சேரர் குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள்.திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இவரின் ஊராகும்.பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி “அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்” என்று கூறுகிறது.திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் “நக்கன் தில்லையழகி” என அறிய முடிகிறது.

கோவிலின் முன் தோற்றம்

கோவிலின் முன் தோற்றம்

பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.

IMG_20141102_121909

தேவியின் ஆடல் திறனை விளக்கும் சிற்பம்

பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும்,சாதனைகளும் பலவாகும்.நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்ததால் சோழ நாட்டில் ஓர் ஊருக்கே இவர் பெயரால் “பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்களம்” என பெயர் மாற்றம் ஏற்பட்டது.

IMG_20141102_121918

போர்த்திறனை விளக்கும் சிற்பம்

பஞ்சவன் மாதேவிச்சரம் என்பது ராஜராஜனின் தேவி பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றனைகாக எடுக்கப்பட்ட நினைவாலயம்.இத்திருகோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இதனை “பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்” என்று குறிப்பிடுகிறது. இதே கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் தளபதி அருண்மொழியான உத்தம சோழ பிரம்மராயன் பற்றியும், சைவ மடங்களுள் ஒன்றான லகுலிசமடம் பற்றியும் அதன் தலைவர் லகுலிச பண்டிதர் பற்றியும் பல வரலாற்று தகவலை சுமந்து நிற்கிறது.

 

பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்

பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்

இக்கோவில் திருச்சுற்றில் உள்ள விநாயகர்,பிச்சை தேவர்,ஆலமரச் செல்வர்,லிங்கோத்பவர், பிரம்மன்,துர்க்கை போன்ற சிற்பங்கள் ராஜேந்திர சோழனின் தனி முத்திரையாகும்.இரண்டு சிவபெருமானின் கோல நிலைகளில் பல்லவர்களின் கலைமனம் கமழ்கிறது. இவை கி.பி. 710-715 வரை ஆண்ட இரண்டாம் நந்தவர்ம பல்லவனின் காலத்தில் அவனது கோநகரான பழையாறையில் இடம் பெற்று இருந்த சிலைகளாய் இருக்கலாம்.

IMG_20141102_122433

பல்லவர் கால சிவபெருமான் சிற்பம்

கருவறையின் அர்த்தமண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்படைபாகும்.இதே போன்ற நந்தியும் தூணும் பழுவுரிலும் காணபடுகிறது. பழுவேட்டரையரின் மகள் என்பதால் இத்தேவி பிறந்த மண்ணின் கலைமனம் கருவறையில் வீசுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து

பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி

பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி

IMG_20141102_122306

பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற லிங்கம்

சோழ பெருமன்னர்களின் தலைநகராகவும்,சோழ அரச குடும்பத்தினர் இறுதிவரை வாழ்ந்த இடம் என்ற பெருமையை உடைய பழையாறை மாநகரில் ஒரு பகுதியாக திகழ்ந்த பட்டீச்சரம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது இந்த பஞ்சவன் மாதேவிச்சரம். பட்டீச்சரம் தேனுபுரிச்சரர் திருகோவிலில் இருந்து அரை கி மீ துரத்தில் உள்ளது இந்த பள்ளிப்படை ஆலயம். தற்பொழுது இந்த கோவில் ராமநாதன் கோவில் என்று அழைக்கபடுகிறது.

IMG_20141102_121951

மேற்கூரிய தகவல்கள் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் குடவாயில் கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. பலர் பார்த்து படித்து பஞ்சவன் மாதேவியின் வரலாற்றை தெரிந்துகொள்ள போகும் படி எங்களின் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை சார்பில் இந்த வரலாற்றை அந்த கோவில் வைத்துள்ளோம், இந்த வரலாற்றை படித்து அதை தொகுத்து எழுதும் பாக்கியத்தை அடியேனுக்கு வழங்கிய எங்கள் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை நண்பர்களுக்கு என் சிரந்தாழ்த்த நன்றிகள், நான் படித்து பரவசமடைந்த பஞ்சவன் மாதேவி வராலாற்றை இன்று பலரும் பார்க்கும் வண்ணம் அங்கே நிறுவியுள்ளோம், அதை என் கையால் எழுதி கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது என்பதை நினைக்கும் பொழுது வரும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எல்லாம் பஞ்சவன் மாதேவியின் அருள்.

IMG_20141102_122029

 

பஞ்சவன்மாதேவி  எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால்   தன்  அன்னை அல்லாத   ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து   இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை  அன்பு இருந்தால் இந்த  எண்ணம்   அவருக்கு  தோன்றி   இருக்கும். இது  இந்த  மண்ணில் வாழ்ந்த  மகத்தான பெண்ணின் நினைவிடம்  மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய   புனித  தளம். உங்கள்  வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டு வாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு  கூறுங்கள்  …

   சோழம் !!சோழம் !! சோழம் !!

நன்றி

“தஞ்சை மைந்தன்” கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273