உலக நாயகி:
சக்தி இல்லையெனில் சிவன் இல்லை, சிவன் இலலையெனில் சக்தி இல்லை. சக்தி சிவனுக்கு இணையானவள், அதை நிருபிக்கவே சக்தி பாதி சிவன் பாதியாய் அர்த்தனாரிஸ்வரர் கோலம் கொண்டார் சிவ பெருமான். எல்லா சிவாலயங்களிலும் உமையாளுக்கு தனி சன்னதி உண்டு. மண்ணோரும், விண்ணோரும் புகழும், என் தஞ்சையம்பதி அமைந்த பெரிய கோவிலிலும் உமையாள் உலக நாயகி என்னும் திருநாமம் கொண்டு தஞ்சம் என்று வருவோருக்கு வஞ்சம் இல்லாமல், நந்தி மண்டபத்திற்க்கு வடக்கிருந்து அருள்பாலிக்கின்றாள்.
அம்மன் சன்னதி- கல்வெட்டு:
“ஸ்வஸ்திஸ்ரீ கொட்டாகர்க்குடியான உலகாண்டநாயகி நல்லூர்க்கு
எழுதின திருகமுப்படி திருபுவனச்சக்கரவர்த்திகள் கோ
தேரின்மை கொண்டான் தஞ்சாவூர் உடையார் ஸ்ரீராஜ
ராஜீஸ்வரமுடையார் கோயில் தாணத்தார்க்கு
இக்கோயிலில் நாம் எழுந்தருழுவித்த உலகமுழுவதும் முடைய நாச்சி
யார்க்கு அமுது உள்ளிட்டு வேண்டும் அவை யிற்றுக்கு அரு
மொழிதேவ வளநாட்டு மேல்கூறு விடையப்புரபற்றிலே
கொட்டார்க் குடியிலே பதின் ஒருவேலி நிலம் இறையிலி
யாகஇரண்டாவது வைகாசி மாதம் முதல் கொடுத்
தோம்இந்நிலம் பதின் ஒருவேலியும் சந்திராத்தவற்
சொல்லுவதாக கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க
இந்நிலத்திற்க்கு காசுகடமை மரவடை புன்பயிர் குளவடை
அளவுவற்கம் உறைநாழி வெட்டி மேற்படிகாவல்
அரைக்கால்வாசி உள்ளிட்ட அனைத்து வற்கமும் உட்பட்ட
தும் இவ்வூர் நந்த்தில் ஓபாதியும் உட்பட இறையிலி
யாக்க் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க்ச்
சொன்னோம் இப்படிக்கு இவை பழந்திபராயர் எழுத்து
இன்னிலத்துக்கு நான்கெல்லையும் திருச்சூலக்கல்லும்
நாட்டிக்கொள்க இவை கொடுமளூர் உடையான்
எழுத்து இவை கயலூர் உடையான் எழுத்து
யாண்டு இரண்டாவது நாள்”
கோவில் வரலாறு:
அம்மன் கோவிலின் கருவறைச்சுவறின் மேற்க்குபகுதியில் உள்ள கல்வெட்டை கொண்டே இக்கோவிலின் வரலாறை நாம் அறிய முடிகிறது. இக்கல்வெட்டு கி.பி 14 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது. ஆகவே கல்வெட்டு பாண்டிய மன்னன் ஒருவனது கல்வெட்டு என்றும், கோவிலை எடுப்பித்தவனும் அவனே என்று கணிக்கலாயினர். ஆணையாக சாசனம் மட்டும் எழுதிய மன்னன், கல்வெட்டில் பெயரை குறிப்பிடவில்லை. தஞ்சை கோவிலுக்கு பாண்டிய மன்னன் வழங்கிய பெருங்கொடையே இக்கோவில் ஆகும்.
உலகம் முழுவதும் ஆண்ட நாச்சி
கல்வெட்டில் பெரிய கோவிலுக்கு ஸ்ரீ இராஜராஜீஸ்வரம் என்று பெயரும், அம்மனுக்கு உலகம் முழுவதும் ஆண்ட நாச்சியார் என்ற திருநாமமும் வழங்கப்பட்டுள்ளது. கோவிலை எடுப்பித்த மன்னன், கோவிலின் பூஜைகளுக்காக தானமாக நிலம் அளித்தற்கான குறிப்பு ஒன்று கல்வெட்டில் உள்ளது. அது அருமொழித்தேவ வளநாட்டில் மேல்கூறாக திகழும் விடையப்புரத்துக் கொட்டகர்க்குடி எனும் ஊரில் பதினொரு வேலி நிலம் என கல்வெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிவாராலயத்து உமா பட்டராகி:
ராசராசன் திருச்சுற்று மாளிகையில் பரிவாராலயத்து உமா பட்டராகி என்னும் பெயரில் அம்மன் கோவில் ஒன்று இருந்துள்ளது, அதற்கு முன்புறமாக கி.பி 14 நூற்றாண்டில் எழுப்பப்பட்டது தான் நாம் தற்போது காணும் கோவில். இக்கோவிலை கட்டுவதற்க்கு முன் திருச்சுற்று மாளிகையும் மகாமண்டபமும் சூறையாடலுக்கு உட்ப்பட்டு அழிவுற்றிருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.
கருவறையில் அம்மன் எழில் உருவம்:
கருவறையில் அம்மன் 7 அடி உயரத்துகும் மேல் நின்ற கோலத்தில் எழிலாக காட்சி தருகின்றார். பாண்டிய மன்னால் உலகு முழுதும் ஆண்ட நாயகி என்று பிரதிட்டை செய்யப்பட்டவள் பிற்கால தமிழர்களால் பெரிய நாயகி என்று அன்போடு அழைக்கப்படுகின்றாள். வட மொழியில் ப்ருஹந்நாயகி என அழைக்கின்றனர்.
கருவறை தேவகோஷ்டங்கள்:
கருவறையின் மூன்றுபுறங்களிலும் தேவகோஷ்டங்கள் உள்ளன.மேற்கு நோக்கிய தேவகோஷ்டத்தில் அம்மன் நிறை உருவ திருகோலம் உள்ளது. மேலிரு திருக்கரங்களில் மான் மழு ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபயம், வரதம் காட்டி அன்னை பராசக்தி அபூர்வமான் கோலம் கொண்டு அருள்பாலிக்கின்றாள். சிவ பெருமானும் அதிகாரநந்தி மட்டுமே ஏந்தும் மான் மழுவை தேவி தாங்கி நிற்பது அரிய காட்சியாகும். வடக்கு கிழக்கு கோஷ்டங்களில் தாமரையையும் அக்கமாலையும் ஏந்தி அபயம் காட்டி தொடைமேல் இறுத்திய கரத்துடன் காட்சி நல்குகிறாள் தேவி.
கருவறையில் கபோதக வரிக்குக் கீழுள்ள பூதகணவரி மிகச்சிறப்புக்குறிய படைப்பாக கருதப்படுகிறது. கபோதகத்திலுள்ள கூடுகளில் சிவபெருமான் பல்வேறு கோலங்களில் எழில்மிகு சிற்பங்களாக படைக்கப்பட்டுள்ளது.
கருவறை அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம்
இவை இரண்டும் கி.பி 14 நூற்றாண்டு கட்டுமான பகுதிகளாக தோன்றுகின்றன. இம்மண்டபங்களின் தூண்களில் பல்வேறு வகையான சிற்பங்கள் காணப்படுகிறது. அவை தடிகொம்பு, கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி அகிய ஊர்களில் காணப்படும் சிற்பம் போல் உள்ளன.
மகா மண்டபத்துடன் இணைந்த பெரிய எழில்மிகு தூண்கள், நீண்டு வளைந்த கொடுங்கைகளுடன் காணப்படும் முக மண்டபம் பிற்கால விசயநகர பாணியில் திகழ்கின்றது. இரண்டு பாயும் சிம்மங்களோடு திகளும் தூண்களும், சிற்பம் பொதிந்த பிற வகையான தூண்களும் இம்மண்டபத்தை தாங்கி உள்ளன.
தூண்களில் காணப்படும் சிற்பங்கள்:
இங்குள்ள தூண்களை பார்த்தால் அனைத்தும் பல்வேறு வகை சிற்பங்களை தாங்கி எழில்மிகு காட்சி தருகின்றன. பைரவர்கொடி பெண்கள், அன்னம், கோபுரங்கள், சங்கு ஊதும் பூதங்கள், வீரபத்திரர், வில்லேந்திய முருகபெருமான், பாயும் மானும் முயலும், பெண்ணொருத்தியின் நீண்ட கூந்தலை இழுக்கும் கிளி சட்டநாதர் விநாயக பெருமான், கின்னரபெண், நர்த்தனகணபதி, பின்னல் பாம்புகள் ஆடும் பெண்கள் போன்ற பல்வேறு வகையான சிற்பங்கள் உள்ளன. பல சிற்பங்களின் தலை அலங்காரம் யாஷ்க்கானம் என்னும் நடனத்திற்குரிய தலை அலங்காரங்களாக இருக்கின்றது. இங்குள்ள சண்டீசர் விமானத்தின் கலைப்பாணியிலே அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாண்டிய மன்னன் ஒருவனால் சோழ நாட்டில் எழுப்பட்டது தான் இவ்வாலயம். அம்மன்ன்னின் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாய் இன்று அழகுற, எழிமிகு காட்சி தருகின்றது. கோவிலுக்கு கொடையளித்து, எடுப்பித்தவன் பெயரை மட்டும் எழுதாமல் சென்றது ஏனோ?.அடுத்த முறை பெரிய கோவில் செல்லும் போது இவ்வாலயத்தின் சிற்ப வேலை பாடுகளை கண்டு ரசித்து வாருங்கள்.
குறிப்புக்கள்
குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதிய தஞ்சாவூர் நூல்
நன்றி
ஜெயா
மிகவும் அருமையான கட்டுரை ஜெயா, தொடரட்டும் உன் எழுத்துப்பணி …….
புதிய தகவல், அருமையான எழுத்து நடை ,அற்புதமான வரலாற்று சான்றுடன் மிக சிறப்பாக உள்ளது ஜெயலெட்சுமி.
நன்றி
நன்றி ஐயா.
Thank you for that valuable information…
நன்றி, அருமையான தகவல்.
New Info…Thanks for finding …Keep searching more !!!
நன்றி 🙂
நன்றி 🙂
நன்றி 🙂