October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini

நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini

18

nisumbasoothini

தஞ்சை முழுவதும் முத்தரையரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த காலம் அது . அபராஜிதன் என்ற பல்லவ மன்னனுக்கும் வரகுண பாண்டியனுக்கும் இடையே போர் மூண்ட சமயத்தில்,தஞ்சை முத்தரையர்கள் பாண்டியர்களுக்கும், விசயாலய சோழன் பல்லவர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டனர்.கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் முத்தரையர்களை வீழ்த்தி விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றினான். இந்த வெற்றி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. இந்த வெற்றி சோழர்கள் பிற்காலத்தில் மிக பெரிய சாம்ப்ராஜியத்தை நிறுவுவதற்கான அடித்தளம் தான் இந்த வெற்றி என்று சொன்னால் மிகையல்ல. மிக பெரிய சோழ சாம்ப்ரஜியத்தின் அச்சாணி விசயலான் பெற்ற வெற்றி.

போரில் வென்ற மன்னர்கள் தங்கள் வெற்றிக்கு தெய்வமாக விளங்கும் கொற்றவைக்கு ஆலயம் அமைப்பது மரபாகும். தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலை தூண்கள் (நியமத்துத் தூண்கள்) கவரவர்மன் எனும் பெரும்பிடுகு முத்திரையன் எடுபித்த நியமத்து மகாளத்துப் பிடாரி கோயில்களின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த தேவியை பாண்டியன் மாறஞ்சடையன், நந்தி வர்ம பல்லவன், சோழ மன்னன் ராஜா கேசரிவர்ம ஆதித்தன் போன்ற பேரு மன்னர்கள் போற்றி வழிபட்டனர் அதே தூண்களில் உள்ள கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இதே நெறியில் தஞ்சையை வென்ற விஜயாலயனும் தஞ்சையில் நிசும்பசூதினியை பிரதிஷ்டை செய்தான். இதை பற்றி திருவாலான்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் அறியமுடிகிறது. அந்த செப்பேட்டில் உள்ள வாசகங்கள் என்னவென்றால்

“தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்
ரஹாஜ தேவோ தத்பராசதந”

சும்பன் நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற தேவியை தஞ்சை நகரில் பிரதிஷ்டை செய்தான். தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட பாதங்களுடைய அத்தேவியின் அருளால்,நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று கூறுகிறது திருவாலான்காட்டு செப்பேடு. இதன் மூலம் தஞ்சை நகரில் சோழ ஆட்சியை விஜயாலய சோழன் நிறுவும்பொழுதே இத் தேவியையும் நிறுவினான் என்பதை அறிய முடிகிறது

தஞ்சையில் உள்ள உக்கிரமாகாளி

தஞ்சையில் உள்ள உக்கிரமாகாளி

பொதுவாக எல்லா ஊர்களிலும் காளி கோவிலாக அல்லது பிடாரி கோவில்லாக தேவியின் திருமுற்றங்கள் காணப்படும்.இங்கு இடம் பெற்று இருக்கும் திரு உருவங்களுக்கு 4 அல்லது 8 கைகள் கொண்டதாக இருக்கும், பெயர்களும் காளி , காளா பிடாரி பட்டராகி என்பதுமாக குறிக்கப்பெறும் ஆனால் தஞ்சையில் விசயலான் எடுபித்த தேவிக்கு “நிசும்பசூதினி” என்று பெயர் பெற்றது. இதனால் இதேவியின் உருவம் மற்ற காளி திரு உருவங்களில் இருந்து மாறுபட்டதாக இருகின்றது.

nisumbatemple

தஞ்சையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிசும்பசூதினி பல கைகளை உடையவர்.மண்டை ஓடுகள் பூணுலாகவும், 8 கரங்களில் சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளார். ஓர் இடது கரம் கீழ் இருக்கும் அசுரனை காட்டுகிறது, வலது கால் துண்டிக்க பட்ட ஒரு தலையின் மேல் ஊன்றியுள்ளது. சண்டன், முண்டன் , கம்பன், நிசும்பன் ஆகிய நால்வரையும் வதைக்கும் காட்சியில் உள்ளார்.

தஞ்சையில் உள்ள நிசும்பசூதனி

தஞ்சையில் உள்ள நிசும்பசூதனி

தமிழகத்தை ஆண்ட அரச பரம்பரையினர் பெண்தெய்வத்தையே குல தெய்வமாக வணங்கி வந்தனர். சோழர்களுக்கும் பாண்டியருக்கும் குல தெய்வம் நிசும்பசூதினி ஆகும். விஜயலானை தொடர்ந்து சுந்தர சோழன் ,ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் ஆகியோருடைய குல தெய்வமாக, காவல் தெய்வமான நிசும்பசூதினியை வணங்கி வந்தனர். ஒவ்வொரு முறை போருக்கு செல்லும் பொழுதும் சோழர்கள் நிசும்பசூதினியை வணங்கிவிட்டு தான் செல்வார்கள். போரில் யாரேனும் உயிர் இழந்தால் அவர்களின் மனகேதம் தீர்க்கும் பொருட்டு இங்கே பூசைகளும் நந்தா விளக்கும் ஏற்றப்படும். ஒட்டுமொத்த சோழநாட்டு மக்களும் மன்னர்களும் தங்களையும் தங்கள் நாட்டையும் காத்து நிற்கும் காவல் தெய்வமாக இந்த நிசும்பசூதனியை நினைத்து வழிபட்டார்கள்.

 நிசும்பசூதனி மற்றும் உக்கிரமாகாளி

நிசும்பசூதனி மற்றும் உக்கிரமாகாளி

விசயாலனால் எடுக்கப்பட்ட கோவில் அழிந்தாலும் நிசும்பசூதினியின் திருமேனி நிலை குலையாமல் இன்றும் காட்சி அளிக்கிறது. தஞ்சை நகரின் மிக தொன்மையான கோவில்களில் இதுவும் ஒன்று. தஞ்சை கீழவசலில் உள்ள வட பத்திர காளியம்மன் கோவிலே நிசும்பசூதனி கோவில், இப்படி எண்ணற்ற சிறப்பு வாய்ந்த இடங்கள் தஞ்சை நகரில் ஒரு ஒரு இடத்திலும் உள்ளது தஞ்சைக்கு வந்தால் பெரியகோவிலை மட்டும் கண்டு செல்லாமல் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க பழமையான இடங்களையும் கண்டு விட்டு செல்லுங்கள்,இது பிற மாவட்ட மக்களுக்கு மட்டும் அல்ல தஞ்சை மக்களுக்கும் தான்.

குறிப்பு:

குடவாயில் திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய தஞ்சாவூர் நூல் மற்றும் வலை தளங்களில் இருந்து குறிப்பெடுக்கப்பட்டது.

நன்றி

லோகேஷ் அருண்


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273