October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / தஞ்சை பெருவுடையார் ஆலயம் ஓர் வான் கயிலாய பர்வதம் !!!

தஞ்சை பெருவுடையார் ஆலயம் ஓர் வான் கயிலாய பர்வதம் !!!

23

தஞ்சாவூர், தமிழர்களின் ஓர் தொன்மையான நகரம். பன்னெடும் காலாமாய் புகழோடு பயணிக்கும் ஓர் ஒப்பற்ற நகரம். பிற்காலசோழன் விஜாயாலயனால் தலைநகராக நிர்மாணிக்கப்பட்ட நகரம், தமிழனின் பெருமையை உலகறிய செய்த ராஜராஜ சோழன் ஆட்சி செய்ய அருள்பெற்ற நகரம். மாறவர்மன் சுந்தரபாண்டியனால் அழிவுற்று, பாண்டியன் ஸ்ரீ வல்லபனால் உயிர்பெற்று, செவ்வப்ப நாயக்கரால் மீண்டும் உயர்வுற்ற நகரம், என்ற எண்ணிலடங்க பெருமைகளை தாங்கி இன்றும் உற்சாகமாக இயங்கி கொண்டு இருக்கும் ஓர் புராதனமான நகரம்.

தஞ்சை பெரியகோவில்  P.C Mohammed Javeed

தஞ்சை பெரியகோவில்
P.C Mohammed Javeed

எண்ணிலடங்க பெருமை தஞ்சைக்கு இருந்தாலும், தஞ்சையின் பெருமைக்கு மாமகுடமாய் விளங்குவது தரணியாண்ட சோழ மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சையை தலைமையிடமாக கொண்டு ஆட்சிசெய்த புண்ணியபூமி என்பதாலே. உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி செய்தான் ராஜராஜன், அந்த வியப்பு இன்றும் ஓய்ந்தபாடில்லை. இன்றும் ராஜராஜனை உலகம் வியக்க செய்வது எது ??? ஒப்பற்ற அந்த மன்னன் எழுப்பிய பெரியக் கோவிலன்றி வேறெதுவாக இருக்கமுடியும் . 1000 ஆண்டுகளுக்கு முன் எந்த தொழிநுட்ப வசதியுமில்லாத காலத்தில் 216 அடியில் ஒரு விமானம் அமைத்து, அழகிய சிற்பங்களுடன், மலைகளே இல்லாத பகுதியில் கருங்கல் பாறைகளால் ஒரு கற்றளி   7 ஆண்டுகளில் எப்படி சாத்தியமாயிற்று ?? என்று உலகமே எண்ணி  வியந்துகொண்டு இருக்கும் இந்த தஞ்சை பெரியகோவில் ஒரு வான் கயிலாய பர்வதம் என்றால் நம்ப முடிகிறதா ????

 

கம்பீரமாக குதிரையில் மாமன்னன் ராஜராஜ சோழன்  இடம் தஞ்சை ராஜராஜ சோழன் மணிமண்டபம்

கம்பீரமாக குதிரையில் மாமன்னன் ராஜராஜ சோழன்
இடம் தஞ்சை ராஜராஜ சோழன் மணிமண்டபம்

அது என்ன வான் கைலாயம் அது அப்படி என்ன சிறப்பு என்று உங்கள் மனதில் எழும் கேள்விகள் எனக்கு கேட்காமல் இல்லை,அப்படி என்றால் என்ன என்று முதலில்  பாப்போம் பிறகு அதற்கும் பெரிய கோவிலுக்குமான தொடர்பை காண்போம்.

வான் கயிலாயம் என்றால்  என்ன ???

சைவ மதத்தில் இரு இடங்கள் மிக முக்கியமானது என்று ஒரு நம்பிக்கை உள்ளது அது வான்கயிலாயம் மற்றும் பூகயிலாயம். இந்த வான் கயிலாயம் என்பது பிரபஞ்சப் பெருவெளியில் மனிதனுடைய ஊனக் கண்களால் காணமுடியாத இடத்தில திகழும் பொன்னாலாகிய மலை என்பதாகும். அம் மலையை மகாமேரு என்று குறிப்பிடுவர். அங்கு ஈசன் உமாதேவி, திருக்குமாரர்கள் ,பிறதெய்வங்களோடும், வானவர்கலோடும், பூத பிசாச கணங்களோடும், முனி சிரஷ்டர்கலோடும் திகழ்ந்து அண்ட சராசரங்களை காத்து அருள்கின்றார் என்பதே சைவ சமய கோட்பாடாகும். இந்த வான் கயிலாயத்தை மனிதர்கள் அடைய முடியா காரணத்தால் தான் நாம் இமய மலைத்தொடரில் உள்ள கயிலாச  மலையை வான் கயிலாயமாக பாவித்து வணங்குகின்றோம். வான் கயிலாயம் பொன் மலையென்றால் பூகயிலை வெள்ளி மலை என்று போற்றபடுகிறது.

மகாமேருவிடங்கர் கல்வெட்டில் கூறியபடி வரையப்பட்ட ஓவியம்  Courtesy : Thanjavur book by Kudavayil Balasubramaniyam

மகாமேருவிடங்கர் கல்வெட்டில் கூறியபடி வரையப்பட்ட ஓவியம் Courtesy : Thanjavur book by Kudavayil Balasubramaniyam

சைவ மதத்தில் அதிகம் பற்று உள்ள ராஜராஜ சோழன் அந்த வான்கயிலாயம்,பூகயிலாயம் பற்றி நன்கு அறிந்து அதனால் ஈர்க்கப்பட்ட நமது மன்னன் ராஜராஜன் அந்த பிரமாண்டத்தை அந்த பரமானந்தத்தை இங்கு கொண்டு வர முயற்சித்த இமாலய சிந்தனையே இந்த ஏழுபனை உயர கற்றளி. ராஜ ராஜன் இந்த கோவிலை பற்றி மாகமேரு(வான் கயிலாயம்) என்றும் தட்சிணமேரு(தென் திசை மலை) என்று பெரியகோவிலில் குறுபிட்டு இருக்கும் கல்வெட்டுகளே சாட்சியாகும்

தட்சிணமேரு

தட்சிணமேரு

வான் கயிலாய  பர்வதம் !!

இது பற்றி தொல்லியல் நிபுணர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய தஞ்சாவூர் நூலில் உலகில் உள்ள சிவாலயங்களுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் தஞ்சை பெரியகோவில் ஒரு வான் கயிலாய பர்வதமகவே விளங்குகிறது. வான் கயிலாயசத்தை பற்றி விவரிக்கும் தொன்மையான நூல்கள் தங்கத்தாலான அம்மலைக்கு பல சிகரங்களும், பல ஆவரணங்களும்(சுற்று அமைப்புகளும்), நடுவில் உள்ள மாகமேரு சிகரம் நான்கு புறங்களிலும் இமவான்,மால்யவான்,ச்வேதன்,கந்தமாதனம் என்று நான்கு சிகரங்களை கொண்டு விளங்குவாதாக கயிலாயத்தை பற்றி விளக்கும் நூல்கள் கூறுவதாகவும் ,மாகமேரு பருவத்தை சுற்றி ஐந்தடுக்கு குற்றுக்கலான பஞ்ச ஆவரணங்கள் உள்ளதாகவும், அவற்றில் பல்வேறு தெய்வங்கள் நின்று அவற்றை காப்பதாகவும் அந்த நூல்கள் கூறுவதாக குருப்பிடுகின்றார்.

ஸ்ரீ விமானம்

ஸ்ரீ விமானம்

மகாமேரு

மேலும் அவர் கூறுகையில் மேற்கூறிய அமைப்பில் தான் பெரியக்கோவில் திகழ்வதாகவும், 216 அடி உயரமுடைய ஸ்ரீ விமானம் மகாமேரு பர்வதமாக வடிவமைகபெற்றது என்றும் , அதன் கிழக்கு திசை சிகரத்தில் சிவபெருமான் உமாதேவி, திருக்குமாரர்கள், பிறதெய்வங்கள்  ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்று  உள்ளன என்று கூறுகிறார். உயர்ந்த இந்த மலையின் நான்கு திசைகளிலும் பீடத்திலிருந்து முன்னோக்கிய பிதுக்கம் பெற்ற கட்டட  அமைப்பு காணப்பெறுகிறது.  இவை முறையே இமவான், மால்யவான், ச்வேதன், கந்தமாதனம் என்னும் நான்கு சிகரங்களாகும். இங்கு நான்கு புறங்களிலும் கருவறைக்குள் செல்லும் வாயில்கள்  அமைந்து உள்ளன. இவ்வாயில்கள் சர்வதோபத்ரம் என அழைக்கப்பெறும்.

வான் கயிலாய காட்சி

வான் கயிலாய காட்சி

வான் கயிலாய மலையாக விளங்கும் ஸ்ரீ விமானத்தை சுற்றி திருசுற்று மாளிகையும் அதனுடன் இணைந்து எட்டு திசைக்குரிய தெய்வங்களின் கோவில்களும் காணபெருகின்றன. இந்திரன், அக்னி, இயமன், நிருதி, வருணன், வாயு, சோமன், ஈசானன் என்னும் இந்த எட்டு திசை தெய்வங்களின் கோவில்களும் திருச்சுற்றாக அமைபெற்று உள்ளன, இதனை லோகபாலர் ஆவரணம் என்பர்.  இதனை அடுத்து பிரகாரத்தில் நந்தி, மகாகாளன், விருஷபம், தேவி, பிருங்கி, கணபதி, ஆறுமுகன், சண்டிகேஸ்வரர் ஆகிய எண்மர் இடம் பெற்று உள்ளனர். இச்சுற்று கணாவரணம் என அழைக்கபெறும்

sri vim

ஸ்ரீ விமானத்தின் மூன்று ஆவணரங்கள் (சுற்றுக்கள்)

ஸ்ரீ விமானத்தில் முன்று ஆவரணங்கள் அமைத்துள்ளன.முதல் ஆவரணத்தில் சிவபெருமானின் ஐந்து வடிவங்களான தத்புருஷம், அகோரம், சத்யோ ஜாதகம், வாமதேவம், ஈசானம் என்றும் ஐந்து வடிவங்களும் இடம் பெற்று உள்ளன.இரண்டாம் ஆவணரத்தில் வித்யேச்வரர், மூர்த்திச்வரர், ராஜராஜேஸ்வரர் ருத்திரர் என்று முப்பதியாறுக்கும் மேற்பட்ட  வில் அம்பு ஏந்திய தெய்வ வடிவங்கள் மேல் நிலையில் காத்து நிற்பதுபோல் அமைகபெற்று உள்ளது. அடுத்து உள்ள ஆவணமாக விளங்குவது தசாயுத புருஷர்கள் காத்து நிற்கும் சுற்றாகும்.

ஸ்ரீ விமானம் மற்றும் அர்த்த மண்டபபகுதிகளில் ஐந்து வாயில்கள் உள்ளன.இவற்றை பத்து தெய்வங்கள் காத்துநிற்கின்றன.இவை முறையே சிவபெருமானின் பத்து ஆயுதங்களான வஜ்ரம்,சக்தி ,தண்டம்,கொடி,சூலம்,அங்குசம்,கதை,பாசம்,கத்தி,சக்ரம், என்பவைகளின் தசாயுத புருசர்கள் ஆவர்.இந்த அமைப்பு முழுக்க முழுக்க வான் கயிலாயத்தின் அமைப்பு முறையாகும்.அவ்வமைப்பு மாறாமல் அமைக்கபெற்ற ஒரு கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்று குடவியில் பாலசுப்ரமணியன் கூறுகிறார்.

ராஜராஜனால் மண்ணுலகில் அமைகபெற்று விண்ணுலகை எட்டி பிடிக்கும்  வான் கயிலாயம் தஞ்சை பெரியகோவில் விமானம்

ராஜராஜனால் மண்ணுலகில் அமைகபெற்று விண்ணுலகை எட்டி பிடிக்கும் வான் கயிலாயம் தஞ்சை பெரியகோவில் விமானம்

என்னவென்று சொல்வது நம் மன்னனை பற்றி எவ்வளவு நுணுக்கமான வேலைபாடு, என்ன அருமையான கட்டிடகலை. கதைகளில் மட்டுமே படித்து கற்பனையிலும் கானயியலாத ஒரு விடயத்தை கண் முன்னே கொண்டு வருவதற்கு எவ்வளவு அசாத்திய திறமை வேண்டும். நமது மன்னன் கதைகளில் கூறப்பட்ட பொன்னால் சூழப்பட்ட ஒரு மலைகளியின் நடுவே சிவபெருமாள் அருள்பாலிக்கும் வான் கயிலாயத்தை பற்றி படித்து அதில் மெய்மறந்து அதை மெய்யாக்க விழைந்த முயற்சிதான் தஞ்சையில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் இந்த உயரிய கலைக்கோவில்.பொன்னால் சூழப்பட்ட வான் கயிலாத்தை அமைக்க முயற்சித்த மாமன்னன் அதை வெறும் கற்றளியாக விட்டுவிடுவானா ???அகாவே ஸ்ரீவிமானம் முழுமையும் பொன்னால் வேய உத்தரவிட்டான் ராஜராஜன் சோழன்.  இந்த விமானத்தை பொன் வேய உத்தரவிட்ட  கல்வெட்டு இன்றும் தஞ்சை கோவிலில் உள்ளது. ஆனால் பிற்கால படையெடுப்பில் அந்த பொன் வேயப்பட்ட கூரை களவாடப்பட்டு உள்ளது. யார் படையெடுப்பில் களவாடப்பட்டது என்பதின்  விவரம் சரியாக கிடைக்கவில்லை

 

ஸ்ரீ விமானம் பொன் வேய்ந்தது பற்றி சொல்லும் கல்வெட்டின் பிரதி

ஸ்ரீ விமானம் பொன் வேய்ந்தது பற்றி சொல்லும் கல்வெட்டின் பிரதி

அண்டவெளியில் நம் ஊனக்கண்ணால் பார்க்க இயலாத அந்த வான் கயிலாய காட்சி நம் தஞ்சையிலே நாம் காணலாம். அகாவே தஞ்சை கோவிலை ஒரு முறை சுற்றிவந்தால் இமயமலையில் உள்ள  பூகயிலாயத்தையும்  , அண்டவெளியில் உள்ள வான் கயிலாயத்தையும்   சுற்றிவந்தற்கு சமம். தஞ்சை பெருவுடையார்  ஆலயம் இன்னும் பன்னெடுங்காலம் நீடூடி நிலைத்து நின்று ராஜராஜனின் புகழை இன்னும் பல தலைமுறைக்கு  பறைசாற்றட்டும். வாழ்க பெரியகோவில் !! வளர்க ராஜராஜனின் புகழ் !!!

                                                                            சோழம்  !!! சோழம் !!!  சோழம் !!!!

குறிப்புக்கள்

குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சாவூர் நூல்

 

என்றென்றும் ராஜராஜ சோழன்  நினைவுகளுடன்

சோழம் !! சோழம் !!! சோழம் !!!

சோழம் !! சோழம் !!! சோழம் !!!

 

 

 

 

 

 

——–கணேஷ் அன்பு

 


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273