October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பள்ளிப்படை நோக்கிய பயணம் -3 (ராஜ ராஜன் சமாதி )

பள்ளிப்படை நோக்கிய பயணம் -3 (ராஜ ராஜன் சமாதி )

19

சென்ற 2 பாகத்திலும் பஞ்சவன் மாதேவி கோயில் சென்றது பற்றியும், ராஜ ராஜ சோழன் சமாதியை பார்க்கும் பொழுது எனக்கேற்பட்ட அனுபத்தையும் பகிர்ந்து கொண்டேன். இப்பொழுது சமாதி என்று நம்பப்படும் இடத்தை பராமரிக்கும் முதியவரிடம் கேட்டறிந்த சில விவரங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

ராஜ ராஜ சோழனை தரிசித்து விட்டு, அவரளித்த கல்கண்டை மென்றுகொண்டே அவரிடம் உரையாடினோம். அந்த இடம் ஒரு தனியாருக்கு சொந்தம் என்றும் 10 ஆண்டுகளாக அவர்  அந்த  இடத்தை பராமரித்து வருவதாகவும் கூறினார். மேற்கொண்டு அவர் கூறிய தகவல்கள் பிரமிப்பு, ஆச்சர்யம், வேதனை அனைத்தையும் கலந்த கலவையாக இருந்தது. அந்த இடத்தில ஒரு மண்டபம் இருந்ததாகவும், அங்கே இருந்த மிகப் பெரிய கற்தூண்கள் தற்பொழுது பால்குளத்தம்மன் கோவிலில் உள்ளது என்றும் கூறினார். அது வெறும் லிங்கம் என்றும் ஆவுடையார் கிடையாது என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அந்த லிங்கம் 16 அடி லிங்கம் என்றும் ஒரு ஒரு சுற்று சுவரும் கிட்ட தட்ட 4 அடி அகலம் என்றும் கூறினார். 4 அடி அகல சுவர் என்றால் அப்பப்பா எவ்வளவு பெரிய மண்டபம் அங்கு இருந்து இருக்க வேண்டும். தற்பொழுது அதன் சுவடுகள் கூட இல்லாமல், சுற்றி இருந்த சுவரின் சுண்ணாம்பு சுவரையும் தோண்டி எடுத்து சென்று இருகின்றனர்.

 

சமாதியை பராமரிக்கும் பெரியவரிடம் உரையாடியபொழுது

சமாதியை பராமரிக்கும் பெரியவரிடம் உரையாடியபொழுது

p31

சமாதியை பராமரிக்கும் பெரியவரிடம் உரையாடியபொழுது

இது  தான் நமது புரதான சின்னங்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையா ??? நமது தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் ஒவ்வொன்றும் வெறும் ஆன்மீக சின்னங்கள் அல்லவே. ஒரு ஒரு கோவிலும் ஒரு நூற்றாண்டின்  வரலாறு,  நமது பண்டைய தமிழனின் பண்பாடு, கலாச்சாரம்.  நமது முன்னோர்கள் வாழ்த்த வாழ்க்கை. நம் முன்னோர்களின் காலடித் தடத்தை நாமே அழிப்பது, நம்மை நாமே இழிவு படுத்தும் செயலல்லவா ???? தமிழா, நீயே உனது பாரம்பரிய பெருமைகளை உதாசீனப்படுத்தலாமா ??? விழித்தெழு தமிழா ! .என்ற பல எண்ணங்கள் என்னுள் வட்டமிட்டுக் கொண்டு இருந்தன. இறுதியாக அந்த பெரியவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு. நம்முடைய ராஜ ராஜா சோழனையும் மீண்டும் தொட்டு தழுவி வணங்கி விட்டு கிளம்ப மனமில்லாமல் வேறு வழியின்றின அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

கிளம்பும் முன் இறுதியாக தொட்டு வணங்கி அகம் மகிழ்ந்த பொழுது

கிளம்பும் முன் இறுதியாக தொட்டு வணங்கி அகம் மகிழ்ந்த பொழுது

கிளம்ப மனமில்லாமல் கிளம்பினாலும், நடந்து கொண்டே திரும்பி அவரை பார்கையில் நீங்களும் என்னை இப்படி விட்டுவிட்டு செல்கிறீர்களா ?? என்று வருத்தமுடன் பார்பதுபோல் இருந்தது

கிளம்ப மனமில்லாமல் கிளம்பினாலும், நடந்து கொண்டே திரும்பி அவரை பார்கையில் நீங்களும் என்னை இப்படி விட்டுவிட்டு செல்கிறீர்களா ?? என்று வருத்தமுடன் பார்பதுபோல் இருந்தது

வண்டியின் திரும்பி வருகின்றபோதெல்லாம் அவனின் சிந்தனைகள். அப்படி என்ன மாயம் செய்து பிறந்தானோ ராஜ ராஜன் ? அவன் ஆண்ட பொழுதும் மக்கள் அவனிடம் மயங்கி கிடந்தனர். இன்று அவன் மாண்டு ஆயிரமாண்டுகள் ஆனாலும் அவனிடம் மயங்கி கிடக்கின்றோம். மாயங்கள் பல செய்வது அந்த மாயகண்ணன் மட்டும் தான  ??? எங்கள் ராஜ ராஜ சோழனும்  தான் என்று மனதில் ஒரு பெருமை. மனது பெருமித பட்டாலும் வயிற்றில் ஒரு வெறுமை. அப்பொழுது தான் தெரிந்தது மணி 12 என்று நாங்கள் செல்லும்பொழுதே முடிவெடுத்தாற் போல் திருக்கருகாவூரில் வண்டியை நிறுத்தி பரோட்டா உண்டோம்.

அப்பா என்ன பசி !!! ஆகா என்ன ருசி !!!

அப்பா என்ன பசி !!! ஆகா என்ன ருசி !!!

நான் முன்னே ஒரு முறை பஞ்சவன் மாதேவி ஆலயம் தேடி கண்டறிய முடியாமல் மனம் வெறுத்து வந்த பொழுது அங்கு தான் உண்டேன். அதன் சுவை நினைவில் இருந்ததால் நண்பர்களுடன் அங்கு உண்டோம். ஆகா இன்றும்   அதே சுவை. பள்ளிப்படை ஆலயங்களை பார்த்த உற்சாகத்தில் மனது நிறைந்தது. நல்ல பரோட்டா சாப்ப்பிட்டதில் வயிறும் நிறைந்த சந்தோஷத்தில் வீடு நோக்கி பயணப்பட்டோம். ஆனால் இல்லம் சென்றவுடன் மேலும் ஓர் இன்பதிர்ச்சி இருகின்றது என்பது அப்பொழுது எனக்கு தெரியவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் நண்பர் சசிதரன் அவர்களை தொடர்பு கொண்டேன். நன்றி சொல்வதற்காகவும், பயண அனுபத்தை பற்றி சொல்வதற்காகவும் அழைத்தேன். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. சில மணித்துளிகள் கழித்து அவரே தொடர்பு கொண்டார். நான் அவருக்கு நன்றி கூறினேன். பிறகு எங்கு இருக்கின்றேன் என்றும் யாருடன் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். சசியும் எழுத்து சித்தர் பாலகுமாரன் ஐயாவும், கங்கை கொண்ட சோழபுரம் சென்று ஐயாவின் கங்கை கொண்ட சோழன் நாவலிற்கு சில தகவல் திரட்ட சென்றதாவவும் வேலை முடித்து திரும்பி வருவதாகவும் சொன்னார். நான் சசியிடம் ஐயாவிடம் பேசலாமா என்று ஒரு தயக்கத்தோடு கேட்டேன். அவர் எந்த தயக்கமும் இல்லாமல் தாரளமாக என்று அவரிடம் அலைபேசியை கொடுத்தார். அப்பொழுது கணீர்  என்ற குரலுடன் ஒரு கானம் ஒலித்தது, என் கண்கள் பனித்தது.

பாலகுமாரன் ஐயாவுடன் சசிதரன்

பாலகுமாரன் ஐயாவுடன் சசிதரன்

அடே அப்பா, என்ன அற்புதமான நாள் ! இன்று ஒரே நாளில்  எத்தனை எத்தனை சந்தோசமான நிகழ்வுகள் !! என்ற நினைப்பும், காலையில் ராஜ ராஜன் என்ற அந்த சிவனின் ரூபத்தையும், மாலையில் அவனையே என்றும் வணங்கும் ஒரு சித்த முனி போன்றவரின் குரல் கேட்க நான் எத்தனை பாக்கியம் செய்து இருக்கவேண்டும். அப்பப்பா அவரின் குரல் ஒலித்த அந்த நொடி  உடையார் காவியத்தின் காட்சிகள் என் கண் முன்னே  சில மணிகள் வந்து போயின. ஒரு வழியாக சுயநினைவு வந்து அவருடன் உரையாடத் தொடங்கினேன். நாங்கள் பஞ்சவன் மாதேவியை தரிசனம் செய்துவிட்டு வந்தோம் என்ற செய்தியை கேட்டு மனிதன் குஷியாகி விட்டார். பின்னே, யாரும் அறியாத அந்த கோவிலை ஊரறிய உலகறிய செய்த மாமனிதன் அல்லவா, ? அரும்பாடுபட்டு அரசிடம் போராடி அந்த கோவிலை புணரமைக்க முயற்சித்தவர் அல்லவா ? அந்த மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும் ?. பிறகு அவர், “நீங்கள் சென்றால் மட்டும் போதாது. பலரிடம் இந்த புண்ணிய தளத்தைப் பற்றி தெரியப்படுத்துங்கள். உங்கள் பயண அனுபவத்தை எழுதிப் பகிருங்கள் “ என்றார். அவசியம் செய்கிறேன் என்றேன்.

பிறகு நாங்கள் உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி சென்று வந்ததையும் கூறினோம். “மகிழ்ச்சி ! பால் குளத்தம்மன் கல்வெட்டை கண்டீர்களா ?” என்று கேட்டார். எனக்கு விளங்கவில்லை. பிறகு அதை பற்றி அவரிடமே வினவினேன் அவர், நாங்கள் பார்த்த அந்த உடையாளூர் சமாதியில் இருந்து இரண்டு தூண்களை அந்த கோவிலில் வைத்து இருப்பதாகவும். அதில் ஒரு தூணில் உள்ள கல்வெட்டை வைத்தே உடையாளூரில் இருப்பது ராஜ ராஜ சோழன் சமாதி என்றும் கருதினோம் என்ற தகவலை சொல்லி அவசியம் அங்கேயும் சென்று வாருங்கள் என்றார். கண்டிப்பாக என்று சொல்லி நன்றி கூறி அந்த இனிய அலைபேசி  அழைப்பை முடித்தோம்.

பிறகு, இதை பற்றி நான் எங்களின் அறகட்டளை நிர்வாகிகள் விவாதம் செய்யும் அந்த ரகசிய குழுமத்தில் விவாதித்த பொழுது, மதிப்பிற்குரிய ஐயா வடிவேல் பழனியப்பன் அவர்கள் நானே அழைத்து செல்கிறேன் என்றார். மறுநாளே வடிவேல் பழனியப்பன் ஐயா, நான், கோவிந்தராஜன் ஐயா, திருமதி கோவிந்தராஜன் அம்மா, அன்பு அரசு, சிவா, அன்பு, ஸ்ரீனி ஆகிய 8 நபர்களும் மீண்டும் பள்ளிப்படை நோக்கி பயணம்  மேற்கொண்டோம். ராஜ ராஜ சோழன் சமாதியின் உண்மை நிலையறிய …!!!

இது உண்மையில் ராஜ ராஜ சோழன் சமாதிதானா ??? அப்படி அந்த பால் குளத்தம்மன் கல்வெட்டு கூறிய செய்தி என்ன ??? அது ஒரு வலுவான ஆதாரமா ??  உண்மையில் அந்த பெரியவர் கூறியது போல் அங்கு சாய்ந்து கிடக்கும் லிங்கம் 16 அடி உயரமா ???? இதுவரை ஏதேனும் அகழ்வாராய்சி நடத்துள்ளதா  ??  போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் இந்நேரம் வந்து இருக்கும். அனைத்திற்குமான பதில் அடுத்த பதிவில்

நன்றி

கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273