October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / பள்ளிப்படை நோக்கிய பயணம் -2 (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி)

பள்ளிப்படை நோக்கிய பயணம் -2 (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி)

25

பயணக்கட்டுரை -1 இல் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை ஆலயத்திற்கு சென்று வந்த எங்களின் பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.  இந்த பதிவில் உலகை ஓர் குடையின் கீழ் ஆண்ட நமது பாசத்திற்குரிய மன்னன் , வீர வேங்கை, சுந்தர சோழனின் அன்பு புதல்வன், தமிழ் குலத்தின் முதல்வன்,  தமிழனின் கட்டிடக்கலையை உலகம் பார்த்து வியக்க செய்த பொறியியல் வித்தகன், அருள்மொழி  என்ற ராஜ ராஜ சோழனின் சமாதி சென்று வந்த அனுபவமே இந்த பயணக்கட்டுரை.

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை ஆலயத்தை தரிசித்து விட்டு கிளம்பும் வேளையில், நண்பர் விஜயகரன் பஞ்சவன் மாதேவி கோவிலை பராமரிக்கும் ஐயப்பனிடம் உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி இங்கிருத்து எத்தனை தூரம் என்று கேட்டார். ஐயப்பன், இங்கிருந்து வெறும் 4 கி மீ தூரமே உள்ளது என்று கூறிவிட்டு,  அந்த சமாதியின் இன்றைய நிலை பற்றி நம்மிடம் வருத்தப்பட்டார். உலகை ஆண்ட அந்த ஒப்பற்ற மன்னன் சமாதியின் இன்றைய நிலை கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லை.  நேற்று முளைத்த சில தலைவர்களுக்கும், சாதிய சிந்தனையை வளர்த்தவர்களுக்கும்,  நடிகர்களுக்கும் சாலையின் மையத்தில் வெண்கல சிலை,  தங்க சிலை ! ஒன்றுமே செய்யாத இன்றைய விளம்பர அரசியல்வாதிகளுக்கும்,  தலைவர்களுக்கும் அரசு செலவு  செய்து சிலை வைக்கும் பொழுது, உலகை ஆண்ட ஒப்பற்ற மன்னனின் சமாதியை இப்படி கேட்பாரற்று கிடக்கும் நிலையில் வைத்திருப்பது கொடுமை என்றார். ஞாயமான கேள்வி தான்.  பின்னர் அவரிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

செல்லும் வழியெங்கும் சோழர்காலத்துக்கு வித்துகள். வழியெங்கும் நாம் கதைகளிலும் நாவல்களிலும் படித்த ஊர்களின் பெயர்கள். அவை பம்பை படையூர், ஆரிய படையூர். இந்த இரண்டு ஊர்களும் சோழர்காலத்தில் படைகளுக்கு போர் பயற்சி அளிக்கும் ஊர்கள். அந்த ஊர்களை கடந்து செல்லும் பொழுது அந்த அழகான பெயரை பார்த்து மெய் சிலிர்த்தோம் அட டா !! எந்த இடத்திற்கு நாம் வந்து உள்ளோம் ? எந்த ஊரில் நாம் இருகின்றோம்?, என்று ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோசம்.  அந்த ஊரின் பெயர் வேறொன்றும் அல்ல. நமது அன்புக்குரிய குந்தவை மற்றும் அருள்மொழி வர்மர்  பிறந்த இடம் தான் “பழையாறை”. இந்த பெயரில் அப்படி என்ன ஒரு மந்திரம் ? ஏன் இந்த பூரிப்பு ? என்று சிந்தித்தால், பொன்னியின் செல்வனில் கல்கியும் உடையாரில் பாலகுமாரனும் எப்படியெல்லாமோ வர்ணித்து, இந்த பெயரை கேட்டாலே புல்லரிக்கும் ஓர் உணர்வை நமக்குள் விதைத்து விட்டார்கள். சோழர் வரலாறு படித்த அனைவருமே குந்தவை, ராஜ ராஜ சோழன் இருவரையும் தமிழ் குலத்தில் வாழ்ந்த இந்த மண்ணின் தெய்வமாகவே நினைக்க தொடங்கிவிட்டோம். அதனால் வந்த உணர்வு தான், பழையாறை என்ற பெயரை பார்த்தவுடன் வந்த பூரிப்பு …

 

"பழையாறை" என்று எழுதப்பட்டு உள்ள பெயர் பலகை

“பழையாறை” என்று எழுதப்பட்டு உள்ள பெயர் பலகை

அதே பூரிப்போடு  அந்த பகுதியை கடந்தோம் ,சிறிது துரத்தில் ஒரு மொட்டை கோபுரத்தில் ஒரு கோவில். அதன் பெயர் சோமநாத சாமி கோவில்.  இதன் வயது 1300ஆண்டுகள் என்பதை கேட்டறிந்தோம். மிகவும் பசுமையான இடம். ஆனால் முறையான பராமரிப்பு இல்லை.

 1982342_10152272732527276_524445583_n

மொட்டை கோபுரமாக காட்சியளிக்கும் சோமநாத சாமி கோவில்

மொட்டை கோபுரமாக காட்சியளிக்கும் சோமநாத சாமி கோவில்

மீண்டும் சோழனை காண அங்கிருத்து புறப்பட்டோம். உடையாளூர் எங்களை இன்முகத்தோடு வரவேற்றது .

1888521_10152244873577276_1697634346_n

1902768_10152272733157276_1774161704_n

நாங்கள் போக வேண்டிய இடத்தை கிட்ட தட்ட நெருங்கிவிட்டோம்.  நாங்கள் சென்று கொண்டு இருந்த தார் சாலையின் இடது பக்கம் ஒரு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் ராஜ ராஜ சோழன்  சமாதி  செல்லும்  வழி என்றும் ராஜ ராஜ சோழனை பற்றிய சிறிய குறிப்பும் உள்ளது.

ராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழியில் வைக்கப்பட்டு உள்ள  பதாகை

ராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழியில் வைக்கப்பட்டு உள்ள பதாகை

ராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழியில் வைக்கப்பட்டு உள்ள  பதாகை

ராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழியில் வைக்கப்பட்டு உள்ள பதாகை

வண்டியை நிறுத்துவிட்டு இறங்கி நடந்தோம். அப்பொழுது தான் தெரிந்தது அந்த ஊரின் பெயர் சிவபாதசேகர மங்களம் என்று. சிவபாதசேகரன் என்பது நமது மாமன்னன் ராஜ ராஜ சோழனின் இன்னொரு பெயர் என்பது நாம் அறிந்ததே. இறங்கி சமாதி இருக்கும் இடம் என்று சொல்லப்படும் இடத்தை நோக்கி நடந்தோம் உடம்பெல்லாம் ஒரே பூரிப்பு. மனதில் அளவு கடந்த இன்பம்.  சொல்ல முடியாத துன்பம்.  ஒரே நேரத்தில் இன்பமும் துன்மும் கலந்து எங்களை ஆட்கொண்டது. அந்த உணர்வை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. சொல்ல முற்பட்டாலும் சொல்ல முடியாமல்  வார்த்தை இன்றி தவிக்கின்றேன். இது சோழன் வாழ்ந்த  இடம். அவர் பாதம் பட்ட புண்ணிய பூமி. இங்கே நம் பாதம்  பட நமக்கு தகுதி உள்ளதா???  என்ற எண்ணமே எங்களின் எல்லோர் மனதிலும் குடிகொண்டது.

இறுதியாக அந்த இடத்தை அடைந்தோம். அந்த பகுதியை பார்த்தவுடன் நான் அன்று  இருந்த நிலையை இன்று எண்ணி பார்க்கும்பொழுது பாலகுமாரன் ஐயா உடையார் 6வது பாகத்தின் முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உடையார் நாவலை முடித்தவுடன் அவர் இருந்த நிலையை குறிப்பிடும் பொழுது, ” நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக் கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்ற நிலையை  சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று ” என்பார்.  கிட்ட  தட்ட அதே போன்றதொரு நிலையைத் தான் நான் சமாதி இருப்பதாக சொல்லப்படும் இடத்தை நுழையும் பொழுது உணர்ந்தேன்.

சோழம் !! சோழம் !!! சோழம் !!

சோழம் !! சோழம் !!! சோழம் !!

உள்ளே நடக்க கால்கள் தடுமாறின. கைகள் நடுங்கின,  “சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது. ராஜ ராஜ சோழன் சமாதி மேல் இருக்கும் லிங்கத்தை கட்டி அணைத்து அழ வேண்டும் போல் இருந்தது.  அடே அற்ப மானிடா ! அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், “நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும் இக்கல்லிலே வெட்டி அருளுக ” என்று பெருந்தன்மையுடனும் தன்னடக்கத்துடன் சொன்ன இம்மண்ணில் வாழ்ந்த மனித தெய்வம் உறங்குவதாக சொல்லும் இடமடா. இங்கே உன் கால் படலாமா??? என்று என் கால்கள் நடக்காமல் பின்னிகொண்டன. அந்த லிங்கத்தை தொட்டுக்கொண்டே சிறிது நேரம் மண்டியிட்டு அமர்ந்துவிட்டேன்.

சோழம் !! சோழம் !!! சோழம் !!

சோழம் !! சோழம் !!! சோழம் !!

பின்னர் ஒரு 90 வயதை கடந்த ஒரு முதியவர் வந்தார். அங்கே சூடம் ஏற்றி காட்டினார். அந்த இடம் அவருக்கு சொந்தமான இடம். அவர் குடும்பமே சேர்ந்து அங்கே தினமும் பூசை செய்து வருகின்றனர். அந்த முதியவருக்கு முதுகு வளைந்து நடக்கவும் முடியவில்லை. கற்பூர தட்டை நிலையாக பிடிக்க கூட முடியவில்லை. அந்த தள்ளாத முதுமையிலும் தளராமல், இது என் மன்னனுக்கு நான் செய்யும் சேவை என்று செய்து வருகிறார்,எந்த லாப நோக்கும் இல்லாமல்.

சமாதியை பராமரிக்கும் முதியவர் !!

சமாதியை பராமரிக்கும் முதியவர் !!

சோழம் !! சோழம் !!! சோழம் !!

சோழம் !! சோழம் !!! சோழம் !!

மாமன்னன் ராஜ ராஜ சோழனுடன் நான்,விஜயகரன் மற்றும் லோகேஷ்

மாமன்னன் ராஜ ராஜ சோழனுடன் நான்,விஜயகரன் மற்றும் லோகேஷ்

அங்கே வந்த எங்களுக்கு அவர் கல்கண்டு கொடுத்தார். கொடுத்துவிட்டு எதோ என்னால் முடிந்தது, நமது பேரரசரை காண வருபவர்களுக்கு எதாவது கொடுக்கவேண்டும். சும்மா அனுப்பக் கூடாது. அதனால் என் வசதிக்கு என்னால் முடிந்ததை தருகிறேன் என்றார். நாங்கள், “நம் தமிழ் மன்னனுக்காக நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது. இது நமது ராஜ ராஜ சோழன் வழங்குவது. இதற்கு விலைமதிப்பே இல்லை” என்று சொல்லி அந்த  கல்கண்டை உண்டோம்..

பிறகு அவர் அங்கு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் எங்களின் பெயர், தொலைபேசி, முகவரியை எழுத சொன்னார். எழுதி கொடுத்தோம். பிறகு அவரிடம் அந்த சமாதியை பற்றிய தவல்களை நாம் கேட்டோம். அவர் சொன்ன விடயங்கள்… அப்பப்பா ! நமக்கு பெரும் வியப்பை தந்தது. அது என்னவென்பதை பற்றியும், இது ராஜ ராஜ சோழன் சமாதி தானா ??? அதற்கு என்ன ஆதாரங்கள் ????  நிருபிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதைப் பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்

-கணேஷ் அன்பு

 


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273