October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / இந்தியாவின் முதல் ஆங்கில பள்ளி தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ்

இந்தியாவின் முதல் ஆங்கில பள்ளி தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ்

62

 

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களான நமது தஞ்சை மற்றும் திருச்சி நீண்ட நெடுங்காலமாக கல்விச்சேவையில் சிறந்து விளங்கி வருகிறது. பண்டைய காலம் தொட்டு இன்றைய நவீன கல்வி வரை திருச்சி மற்றும் தஞ்சை சிறப்பான இடத்தில் இருப்பதும் நாம் அறிந்ததே. இந்த நவீன கல்வி இங்கே கால் ஊன்றியதற்கும், இத்தகைய வளர்ச்சி பெற்றமைக்கும் முக்கிய காரணம்,கிறிஸ்துவ மிசன் மற்றும் கிறிஸ்துவ மத போதகர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த கிறிஸ்துவ மத போதகர்களால் துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலை முடுக்கெல்லாம் கல்வியை கொடுத்தது,அதுவும் குறிப்பாக கிராம புறங்களில்.

அன்றைய கால கட்டங்களில் அப்போதைய அரசு கல்வித்துறையில் அதிக ஆர்வம் காட்டாத போதும், கிறிஸ்துவ மதபோதகர்கள் அனைவருக்கு கல்வி வழங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இன்றைய நவீன கல்விமுறையை திருச்சி, தஞ்சையில் அறிமுகபடுத்தியது தரங்கம்பாடி மிசன் மற்றும் மதபோதகர்களே ஆவார்கள். ஒரு ஒரு கிராமதிற்கும் இந்த கல்வி முறையை கொண்டு செல்வதிலும் இவர்கள் தான் முன்னோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1756 ஆம் ஆண்டு இரண்டு மதபோதகர்கள் மிக நீண்ட பயணம் மேற்கொண்டு பல இடங்களில் பள்ளிகளை நிறுவினர். அந்த இருவரில் மிக முக்கியமானவர்,பிரபலமான  பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ் (Rev. Frederick C. Schwartz).இவர் 1761 ஆம் ஆண்டு திருச்சி வந்தார் , 1772 ஆம் ஆண்டு ஆற்காடு நவாபிடம் இருந்து பண உதவி பெற்று தேவாலயம் மற்றும் பள்ளியை நிறுவினார்.

10009685_10152150835904865_820640298_n

துலாஜா மகாராஜா என்ற மராட்டிய மன்னர் தஞ்சையை ஆண்டு கொண்டு இருந்த சமயத்தில் தஞ்சையில் காலடி எடுத்து வைத்தார் பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ். அப்பொழுது தஞ்சையில் இருந்த பிரித்தானிய ரெசிடென்ட் (இன்று நாம் கூறும் மாவட்ட ஆட்சியர் போல்,கிழக்கு இந்திய கம்பனியின் மாவட்ட பிரதிநிதிக்கு ரெசிடென்ட் என்று பெயர்) சல்லிவன் (Sullivan)என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ் (Rev. Frederick C. Schwartz) தஞ்சை மகர்நோன்புசாவடியில் 1784 ஆம் ஆண்டு மாகாணப் பள்ளி(Provincial school) ஒன்றை தொடங்கினார். இந்த மாகாணப் பள்ளியின் மரபு வழியில் வந்ததே தற்பொழுது தஞ்சை நகரின் மையத்தில் இயங்கும் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி.

St. Peter's Higher Secondary School, North Main street Branch,Thanjavur

St. Peter’s Higher Secondary School, North Main street Branch,Thanjavur

இந்த உன்னத பணி செய்வதற்கு பிரெட்ரிக் C .சுவார்ட்ஸ்  (Rev. Frederick C. Schwartz)  அவர்களுக்கு,தஞ்சை மராத்திய அரச குடும்பத்தில் இருந்து நல்ல ஒத்துழைப்பும்,உதவியும் கிடைத்தது.  சரபோஜி மகாராஜா இந்த மாகாணப் பள்ளி கட்டுவதற்கு தன சொந்த நிலத்தை தானமாக தந்தார்.கிழக்கு இந்திய கம்பனியும் பள்ளி கட்டுவதற்கு சிறப்பு மானியங்கள் வழங்கியது.

இந்த மாகனப்பள்ளி பிறகு வேதியாபுரதிற்கும்(அம்மன்பேட்டை) ,பின்னர் தற்போதைய வடக்கு வீதியில் மாஸ்டர் ராம் மாடி(தஞ்சையில் அன்று வாழ்ந்த ஆங்கில ஆசிரியர்)என்று சொல்லப்படும் இடத்திற்கு மாறியது.பின்னர் இந்த பள்ளி தஞ்சையில் 5 கிளைகளுடன் இயங்கியது அவை
1.மகர்நோன்புசாவடி
2.கோட்டை-வடக்கு வீதி சந்திப்பு
3.கரந்தட்டன்குடி
4.கீழவாசல்
5.அரண்மனை வளாகம்

மேற் கூறிய இந்த 5 கிளைகளில் தற்பொழுது வடக்கு வீதி,கீழவாசல்,அரண்மனை வளாக கிளை மட்டுமே உள்ளது

St. Peter's Higher Secondary School,East Gate Branch,Thanjavur

St. Peter’s Higher Secondary School,East Gate Branch,Thanjavur

இந்த பள்ளிக்கு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான இடமும், ஒரு தனித்த வரலாறும் உண்டு அது என்னவென்றால் இந்த பள்ளிதான் இன்றைய ஒருகிணைந்த ஒட்டுமொத்த இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலப்பள்ளி என்ற பெருமை  தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியையே சாரும்.மேலும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த G.U.போப் (G. U. Pope) இந்த பள்ளியில் ஆறு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார் என்பது கூடுதல் சிறப்பாகும்.சிறப்பாக பணியாற்றிய இந்த பள்ளி 1864 ஆம் ஆண்டு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது,ஆனால் நிதிப்பற்றாகுறையால் 1908 ஆம் ஆண்டு  கல்லூரி மூடப்பட்டது.மீண்டும் வெறும் பள்ளியாக செயல்பட தொடங்கியது.

St. Peter's Higher Secondary School,Palace Annexe,Thanjavur

St. Peter’s Higher Secondary School,Palace Annexe,Thanjavur

அரண்மனை வளாகக் கிளையில் உள்ள தற்போதைய மிகப்பெரிய மைதானம், முன்பு ஹுசூர் மகால்( Huzur Mahal garden) பூங்கா என்று அழைக்கப்பட்ட பூங்கா, இந்த பூங்கா மராட்டிய மன்னன் குடும்பத்திற்கு சொந்தமானது. 1924 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு லீசில் வழங்கப்பட்டது.230 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிக்கு மற்றொரு சிறப்பு சேர்க்கும் விதமாக உலகின் முதல் இன்டராக்ட் கிளப்(Interact Club) ஆனா ரோட்டரி கிளப்பின், இளையோர் பிரிவு  (Youth Wing) 1962 ஆம் ஆண்டு அப்போதைய பள்ளி முதல்வர் திரு பாண்டியன் அவங்களால் தொடங்கப்பட்டது.

பல துறையில் பல்வேறு சாதனை படைத் பலரை இந்த பள்ளி உருவாகியுள்ளது.இன்றும் செயல்படும் இந்த பள்ளி மேலும் சிறப்புடன் செயல்பட்டு பல நூற்றாண்டுகள் கல்வி சேவை புரிந்த மேலும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டும், உருவாக்கும் என நம்புவோம்.

ஹிந்து நாளிதழ் செய்தி,குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் தஞ்சாவூர் புத்தகம்,ஐயா கோவிந்தாராஜன் வழங்கிய தகவல்கள் அனைத்தையும் கேட்டு படித்து இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன்

நன்றி

கணேஷ் அன்பு


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273