October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / சோழன் பயணம்!!!

சோழன் பயணம்!!!

24

15/02/2014

மணி என்னவென்று தெரியவில்லை. சூரியன் உதிக்கும் நேரம் போல் தான் தெரிகிறது. எனது கேமராவுடன் காத்துக்  கொண்டிருந்தேன். தஞ்சை பெரிய கோவில் முழுவதுமாய் பூவால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆயிரம் யானையும்,  ஐநூறு நாட்டிய பெண்களும், யாழிசையும் ஒன்றாய் சஞ்சரித்த தருணம் அது.

சமஸ்க்ரத  சப்தங்கள் ஒலித்து கொண்டே இருந்தது. வானவேடிக்கையும் நிகழ்ந்து கொண்டே இருந்தது. என் கண்களே நம்ப முடியாத அளவு அத்தனை அலங்காரங்கள். இந்த தருணத்திற்காகத் தான் இத்தனை நாள் காத்துக் கிடந்தேன். யாருக்குமே கிட்டாத ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததே என்று பெருமிதம் கொண்டேன்.

எப்போது  அந்த புகைப்படத்தை எடுக்க போகிறேன் என்று மிக ஆர்வத்தில் இருந்தேன். வழியெங்கும் பெண்களின் நடனம், கலை வல்லுனர்களின் இசை, எங்கோ தேவலோகத்தில் மிதப்பது போல் இருந்தது. தூரத்தில் இருந்து ஒரு மந்திரியின் குரல் கேட்கிறது, “ராஜா ராஜா சோழனை புகைப்படம் எடுக்க வந்த கலைஞனை உள்ளே வர சொல்லுங்கள்” என்று.

எனக்கு என்ன செய்வதே என்று தெரியவில்லை. கடல் வழியே வியட்நாம் வரை சென்று போர் புரிந்து ஆட்சி செய்த மன்னன், உலகம் போற்றும் அருள் மொழி வர்மனையா புகைப்படத்தில் பதிவு செய்ய போகிறோம் என்று சற்று உடல் நடுக்கத்துடன் உள்ளே சென்றேன். பொதுவாக தஞ்சை பெரிய கோவிலின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இன்று எப்படியோ இந்த பாக்கியம் எனக்கு கிட்டியது..

உள்ளே சென்று கருவறையில் ராஜா ராஜா சோழனுக்காக காத்துக் கிடந்தேன். இருள் அதிகமாக இருந்ததால் மந்திரியிடம் ஒரு Trial shot-க்கு அனுமதி கேட்டேன்.

மந்திரி  சந்தேகத்துடன் “Trial என்றால் என்ன ?” என்றார்

நான், “ Trial என்பது ஒரு sample;  அதாவது ஒரு ஒத்திகைப் படம் போல” என்று உளறினேன்.

“சரி” என்ற படி சிரித்தார்.

கேமராவில் பிளாஷ்-ஐ பொருத்திவிட்டு முதல் புகைப்படத்தை எடுத்தேன்.

பளீர் என்று வந்த வெளிச்சத்தில் கலைகிறது என் கனவு…….

வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து பார்த்தால், மணி மதியம் முன்று. இப்படி ஒரு கனவில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பே இது. எழுந்து போய் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன்.

தஞ்சை பயணம், கோவில்கள், ராஜா ராஜா சோழன் … சரித்திர ஆர்வமும் ஆர்வ கோளாறும் என் கண்களில் தெரிந்தது.

14/02/2014

தஞ்சை பயணத்தின் நோக்கம் என்னவோ அரசு பத்திர பதிவு அலுவலகத்தில் ஒரு பதிவு செய்வதே. ஆனால் மனம் பெரிய கோவிலின் முதல் தளம்  செல்ல வேண்டும் என்பதிலேயே இருந்தது. எனது நண்பர்கள், தோழிகள் என்று அனைவரும் சென்று இருந்தோம்.

துங்கா இரவு, ரயில் பயணம் சற்று களைப்பாகவே இருந்தது. பத்திர பதிவுகள் மதியம் போல் முடிந்தது. களைப்பின் உச்சத்தில் படுத்து தூங்கினால் போதும் என்றிருந்தேன்.

அப்போது தான் என் ஆசைக்கு அடித்தளம் போட்டார் எனது நண்பர் லோகேஷ். பெரிய கோவில் முதல் தளம் செல்ல அனுமதி வாங்க போவதாக ஆரம்பித்தார். பல முறை அப்படி ஒரு வாய்ப்பை நழுவ விட்டவன் நான். வந்த நோக்கதில் இதுவும் ஒன்று  தானே என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன்.

சோர்வும், களைப்பும் என்னை கட்டித் தழுவியது. மதிய உணவை முடித்து விட்டு கோவில் வந்து சேர்ந்தோம்.

Brihadeeswarar Temple

கோவிலின் உள்ளே நுழையும் போதே அப்படி ஒரு பிரம்மாண்டம். எத்தனை முறை இந்த கோவிலுக்கு வந்தாலும், அத்தனை முறையும் மலைத்து போய் நிற்கிறேன்.இப்படி ஒரு பிரம்மாண்டத்தை ஏன் உலக அதிசயத்தில் சேர்க்கவில்லை என்ற கேள்வி என் மனதில் எழுந்து கொண்டே இருந்தது.

கோவிலின் முதல் தளம் போவது  அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. லோகேஷ் அனுமதிக்காக  இங்கும் அங்கும் அலைந்த படி இருக்கிறார். கேமராவில் charge குறைந்ததால் கோவில் அலுவலகத்தில் அனுமதி பெற்று நானும், kitchaவும் அங்கே அமர்ந்து விட்டோம். ராஜா ராஜன் அருள் இருந்தால் மட்டுமே அவர் வாழ்ந்து, வசித்த இடங்களுக்கு உன்னை அனுமதிப்பார் என்று விளையாட்டாய் கூறிகொண்டே இருந்தார் விஜய்கரன். நானோ களைப்பின் உச்சத்தில்! முதல் தளம் செல்லும் ஆசையை தவிர வேறு எதுவும் என்னை அங்கே காத்திருக்க செய்யவில்லை.

Friends

ஜெயா, அஷ்வினி, கணேஷ், செந்தில், ஐயா கோவிந்தராஜன், ஐயா வடிவேலன் அனைவரும் கோவிலின் அரிய ஆச்சரியங்களை பேசும் போது மனம் அவர்களின் உரையாடலை ஆர்வமாய் கேட்கிறது. உடல் சோர்வு மனதிடம் போட்டி போட்டு கொண்டே இருக்கிறது. மனம் உடலை வெல்கிறது.

மணி நான்கு. தஞ்சை பெரிய கோவிலின் முதல் தளம் செல்ல அனுமதி வந்தவுடன் மனம் கொஞ்சம் உடலை சுறுசுறுப்பாக்கியது. வழிக்காட்டியாக கோவில் அலுவலகத்தில் இருந்து ஒருவரும், அவரை தொடர்ந்து நங்கள் அனைவரும் பின்னே சென்றோம். குறுகிய பாதையாய் இருக்க ஒருவர் பின் ஒருவராக முதல் தளம் சென்றோம்.

கோபுரத்தை முதல் தளத்தில்  இருந்து பாக்கும் போது மாலை வெயிலில் தங்கம் போல் ஜொலித்து கொண்டு இருந்தது. என்ன ஒரு அதிசயம்?

Brihadeeswarar Temple

எந்த கோணத்தில் பார்த்தாலும் இந்த கோபுரம் வசீகரமான அழகை மட்டுமே முகவரியாய் வைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த விசாலமான தளத்தில் இருந்து ராஜ கோபுரத்தின் நுழைவாயில் படி இருள் சூழ, கைபேசியின் வெளிச்சத்தை மட்டுமே வைத்து உள்ளே சென்றோம். எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர், இந்த வழியால்  தான் ராஜராஜன்  வந்து சிவலிங்கத்தை தரிசிப்பார் என்ற போது மெய்சிலிர்த்த  போனேன். ராஜராஜன் போன அதே வழியில் தான் நான் இன்று சென்று கொண்டிருகிறேன். என் சோர்வும், களைப்பும் எங்கே போனது என்றே தெரியவில்லை. இருளில் ஏதோ இனம் புரியாத உணர்வு.

ராஜராஜன் மகிழ்ச்சியில் இருக்கும் போது இந்த சுவர்களில் தானே சாய்ந்து இருக்க வேண்டும். சோகத்தில் இருக்கும் போது இங்கிருந்து தானே நிலவில் காய்கிற கோபுரத்தை பார்த்து யோசித்திருக்க வேண்டும். இருளை நெருங்கும் போது இங்கு தான் எங்கோ ஒரு மூளையில் ராஜராஜன் அமர்ந்து தியானம் செய்வார் என்று கைபேசியின் வெளிச்சத்தை இங்கும் அங்கும் அசைவு செய்கிறேன். வழிகாட்டி கோவில் கட்டப்பட்ட குறிப்புகளை சொன்ன போது தான் கனவில் இருந்து வெளியே வந்தேன்.

சிறுது நேரம் பேசிவிட்டு விளக்கை ஒளிரச் செய்தார். ராஜ கோபுரம் உட்புறம் எங்கும் வெளிச்சம் பரவியது. அதை பார்த்து அப்படியே உரைந்து  போனேன். “ஓம் ” என்ற ஒரு ஒலியை எழுப்பினார். அது ஓசையாய் மாறி இரண்டு முன்று நொடிக்கு கேட்டுகொண்டே இருந்தது. மீண்டும் மலைத்து நின்றோம். யோசித்து பார்த்தால், இங்கு பல பிராமண ஆச்சாரிகள் ஒன்றாக சமஸ்கிரத மந்திரங்களை  ஒலிக்கும் போது எப்படி எல்லாம் எதிரொலிக்கும்  என்று செவிகள் கேட்க ஆர்வம் கொண்டது.

216 அடி உயரம்,
5 1/2 அடியே அஸ்திவாராம்,
மேலே உள்ள கும்பம் ஆறு பாகங்களால் செய்யபட்டு 80 டன் எடையுள்ளது ,
1008 நந்திகேஸ்வரன்,
254 லிங்கங்கள்,
400 நடன மங்கைகள் வசித்த கோவில்,
108 ஆடல் கரணங்களில் 81 முடிக்க பட்டவை ,
108 ஆடல் கரணங்களில் 81 வரை மட்டுமே ராஜ ராஜன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன…. மீதி இடங்கள் காலியாகவே இன்றும் காட்சி தருகிறது…
சிற்பங்கள், ஓவியங்கள்,
64 ஏக்கர் நிலபரப்பில் அமைந்த ஒரு கோவில்

ராஜகோபுரத்தில் ஒரு கல் ஒன்றின் மேல் சொருகி தனக்குத்  தானே துணை தந்து 1000 ஆண்டை கடக்கும் வலிமை கொண்ட கட்டிட கலை. அப்படி ஒரு தொழில் நுட்பம்.

எப்படி ஒரு ராஜாவால் இது முடிந்தது? எப்பேற்பட்ட  திமிரு?

1000 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த கோவிலை மிஞ்சிய கட்டிட கலை எங்கு உள்ளது?

முன்றாம் உலக போர் வந்தாலும் இந்த கோவிலுக்கு தங்களால் எந்த ஒரு சேதமும் வாராது என்று உலக நாடுகள்  உறுதி பூண்டுள்ளன.

1000 ஆண்டுகள் கடந்து என் தேசத்து மக்களை ஏன் இப்படி ஒரு கட்டிட கலையால் காப்பற்றப்பட வேண்டும்? என்ன ஒரு தொலை நோக்கு சிந்தனை?

என்னுடன் வந்த அனைவருக்கும் இப்படி பல சிந்தனை ஓடி கொண்டே இருக்கும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

இந்த தேடல் மெய்ஞானமா  அல்லது  விஞ்ஞானமா என்று எள்ளளவும் புரியவில்லை.

கோவிலின் உள்ளே சிற்பங்களும் சிலைகளும் என்னுள் பல உள்ளுணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. சிற்பங்களில்  உள்ள தெய்வீக கலையில் உள்ளம் சாந்தம் ஆனது.

paintings

புகைப்படம் : விக்கிபிடியா

இந்த சிலைகளை பார்க்கும் போது தான் எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரையில் வரும் சுவாமிமலை ஸ்தபதியின் கதை ஞாபகம் வருகிறது.

சுவாமிமலையில் வாழ்ந்த ஒரு ஸ்தபதி, ஒரு வியபாரியிடம் முன்பணம் வாங்கி சிலைகளை செய்து தந்தார். அந்த வியபாரி அவசர படுத்தியதால் மறுநாளே தருகிறேன் என்று கோவத்துடன் சொன்னார். வேகவேகமாய் சிலையை செய்து சொன்னது போல் அடுத்த நாளே தந்தார். கொடுக்கும் போது தான் சிலையின் முகம் கலையிழந்து, அதில் கோபமும் வெறுப்பும் குடி இருந்ததை கவனித்தார். வாங்கிய பணம் அனைத்தையும் திருப்பி தந்து சிலைகளை பெற்று பரணியில் தூக்கி போட்டார்.

ஒரு கல் சிலை ஆகிறது என்றால் அது சிற்பியின் கடவுள் நிறைந்த மனமே. அன்பு மட்டுமே மனதை கடவுள் ஆக்கும். மனதில் அன்பு இல்லாத போது சிலை கல்லாகும், அன்பு நிறையும் போது கல் கடவுளாகும் என்று முடியும் கதை.

இங்கு இத்தனை சிலைகளை பார்க்கும் போது தான் ராஜராஜன் அனைத்து சிற்ப வல்லுனரிடமும் கடவுளாய் அன்பு செலுத்தினார் என்பது தெரிகிறது.

Sanskrit Text

இந்த கோவில் கட்ட உதவிய அத்தனை பெயரையும் கல்வெட்டில் பொறித்தார்கள் என்று வரலாறு கூறிகிறது. அனால் சிலைகளை செதுக்கிய அந்த சிற்பியின் கையெழுத்து எங்குமே இல்லை. இந்த சிலையை புகைப்படம் எடுத்தால் கூட கையெப்பம் இட்டு இணையத்தளத்தில் போடுவது இன்று உலக வழக்கம் ஆகிவிட்டது. ஆனால் அந்த சிலைகளை செதுக்கிய கைகள் அவர் கையெப்பம் இடாததால் இன்னும் என்னை பல கோணங்களில் யோசிக்க செய்து விட்டார்கள்.

Friends

என்னுடன் வந்த அத்தனை பேர் முகத்தையும் பார்த்த போது, கோடி கணக்கான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், கண்ணீர் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆயிரம் கேள்விகள் நெஞ்சில் உதிக்க  ஆரம்பித்தது. தேடல் தீவிரம் ஆனது போல் உணர்தோம். எழுவதை கடந்த ஐயாவும் சரி, இருபதைக்  கடந்த தோழியும் சரி, இங்கு ஒன்று கூடியது ராஜராஜசோழன் மீது உள்ள ஆர்வமே.

இதுவும் சோழன் பயணம் போல் தான், தொடரும்.

Source: http://www.sureshonline.com/2014/02/cholan-payanam/


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273