October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / தமிழுக்கும் அமுதென்று பேர் …

தமிழுக்கும் அமுதென்று பேர் …

12

 

‘வாலை பல தோள் வளிக்கி வாளிபற் உயிர் ஊசள்’.

ஒரு திரைபடத்தில் வரும் காமெடி வசனம் இது. ஆனால் இது உண்மை தான். தற்கால இளசுகளின் வாயில் நம் தாய் மொழி படும்பாடு ? அப்பாப்பா …. தமிழை நேசிக்கும் நாமே சிறிது காலத்தில் மறந்து விடுவோம் போல. இந்த பதிவின் நோக்கமானது,  இனி வரும் சந்ததியினருக்கு அழகு தமிழை எடுத்துரைப்பதாகும்.


அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே … !!

ஆஹா ஆஹா …. என்ன பொருத்தமான வரிகள். எந்த பிற மொழிக்கும் இல்லாத சிறப்பு, நம் தமிழ் மொழியின் ‘ல ள ழ’ புழக்கத்திலும் ‘ர, ற’ வேறுபாடுகளிலும் தான் உள்ளது.


‘சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’
என்பது போல எழுத்துக்களை ஆரம்பத்திலிருந்தே சரியாக உச்சரிக்க கற்றுக் கொண்டால், பிழை நிகழாது.


ஒரு மொழி எவ்வாறு உருவாகிறது ?
நாம் பேசும் மொழியானது, உள்ளிருக்கும் காற்றினை வெளியில் விடும் பொழுது மிடறு, நாக்கு, பற்கள், வாயினது மேற்பகுதியாகிய அண்ணம், உதடுகள் ஆகிய உறுப்புகளின் உதவியால் உருவாகிறது.

 

ல, ள பிறப்பிடம் :

நுனி நாக்கினால் நுனி அண்ணத்தை தொடும் பொழுது ‘ல’கரம் பிறக்கும்.

நாவின் நுனி சற்று வளைந்து நுனி அண்ணத்திற்கும், இடை அண்ணத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தொடும் போது ‘ள’கரம் பிறக்கின்றது.

இவற்றினை ‘மருங்கொலி’ என்பர்.

“ நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் “ ( தொல் – 96 )

என்கிறார் தொல்காப்பியர்.

 

ழ, ர பிறப்பிடம் :

நாக்கின் நுனியானது, நன்கு வளைந்து இடை அண்ணத்தில் உரசுவதால் ‘ழ’காரம் பிறக்கிறது. இதனை ‘உரசொலி’ என்பர்.

நுனிநா நுனியண்ணத்தை வருடுவதால் ‘ர’காரம் பிறக்கிறது. இதை ‘வருடொலி’ என்பர்.

“ நுனிநா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் “ ( தொல் – 95 )

 

ற பிறப்பிடம் :

நுனி நாக்கினை நுனி அண்ணத்தில் ஆட்டுவதால் பிறப்பது ‘ற’காரம் ஆகும். இதனை ‘ஆடொலி’ என்பர்.

“அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றஃகான் ……. பிறக்கும் “ ( தொல் – 94 )

 

பயிற்சி வரைபடம்

படம் : இணையத்தில் எடுத்தது.

இவ்வாறாக, தமிழ் எழுத்துக்களின் பிறப்பு முறை மற்றும் உச்சரிப்பை குறித்து தொல்க்காப்பியரும் நன்னூலாரும் பல செய்திகளை கூறியுள்ளனர். சிலர் ‘அதன் பொருட்டு’ என்று எழுத வேண்டிய இடத்தில் ‘அதன் பொறுட்டு’ என்று தவறாக எழுதுகிறார்கள். சிலரோ, ‘என்னைப் பொறுத்தவரை’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘என்னைப் பொருத்தவரை’ என்று தவறாக எழுதுகிறார்கள். இதற்கு காரணம் ஆரம்பத்திலிருந்து சரியாக உச்சரிக்க பழகாமையே ஆகும். தீக்கிரையாகும் ‘எரிந்தான்’ என்ற சொல்லை ‘எறிந்தான்’ என்று தவறாக எழுதினால், தமிழையே தூக்கி எறிந்த மாதிரி ஆகி விடாதா ?

 

சில எடுத்துக்காட்டுகள் :

ஆல் ( ஆலமரம் ) / ஆள் ( மனிதன் ) / ஆழ் ( ஆழ்ந்து )

இலை ( தழை ) /  இளை ( மெலிவது ) / இழை ( அணிகலன் )

உலவு ( நட ) / உளவு ( இரகசியம் ) / உழவு ( பயிர்த்தொழில் )

வலி ( நோய் ) / வளி ( காற்று ) / வழி ( பாதை )

சூல் ( கருப்பம் ) / சூள் ( சபதம் ) / சூழ் ( வளை )

கரை ( எல்லை ) / கறை ( களங்கம் )

திரை ( அலை ) / திறை ( கப்பம் )

மரி ( இற ) / மறி ( மான் குட்டி )

நிரை ( வரிசை ) / நிறை ( நிரப்பு )

விரல் ( ஒரு அங்கம் ) / விறல் ( வெற்றி )

பரவை ( கடல் ) / பறவை ( பறக்கும் உயிரினம் )

ஊருதல் ( தவழ்தல் ) / ஊறுதல் ( நீரில் நனைதல் )

 

இவற்றைப் போன்று மேலும் ஆயிரக்கணக்கான சொற்கள் உள்ளன. விரும்பினால் வெளியிடலாம்.

இன்று வானொலியிலும் தொலைக்காட்சியிலும் உச்சரிப்பு மாற்றத்தோடு பேசி பொருளைத் திரித்து நகைக்கின்றதை பார்த்தல் வேதனை தான் மிஞ்சுகிறது. நாம் அனைவரும் வெட்கப்படாமல் நல்ல தமிழ் நூல்களை வாய் விட்டு படித்தால் தான் உச்சரிப்பு சரியாக வரும். சரியான பொருளையும் விளங்கிக் கொண்டு எழுத முடியும்.

சரி நண்பர்களே, இப்போது உங்களை நீங்களே சோதித்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். கீழ்காணும் வினாக்களுக்கு விடை உங்களுக்கு தெரியுமா ? தெரிந்தால் கூறுங்களேன் !

1) தலை ( சிரம் ) / தளை ( ??? )

2) குளவி ( வண்டு ) / குழவி ( ??? )

3) தாலி ( மாங்கல்யம் ) / தாழி ( ??? )

4) மால் ( திருமால் ) / மாள் ( ??? )

5) வேல் ( கருவி ) / வேள் ( ??? )

6) அருகு ( பக்கம் ) / அறுகு ( ??? )

7) விறகு ( மரத்துண்டு ) / விரகு ( ??? )

8) நிறுத்தம் ( நிறுத்துதல் ) / நிருத்தம் ( ??? )

9) கோரல் ( வேண்டுதல் ) / கோறல் ( ??? )

10)கூரை ( வீட்டின் மேற்பகுதி ) / கூறை ( ??? )

மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன். வருகை தந்ததற்கு நன்றிகள் பல.

 


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273