October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / திருத்தாண்டகம்- தேவாரப் பதிகங்கள் (இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்தோதி அருளியது)

திருத்தாண்டகம்- தேவாரப் பதிகங்கள் (இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்தோதி அருளியது)

3

பலவகைத் – திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் (ஆறாம் திருமுறை)

பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.
—————————————————————————————

பொ-ரை: நிலையாமை நீங்காத முறைமையுடைய பொருள்களையே சிறப்பித்துப் பேசிப் பொழுது புலர எழுந்தது முதல் பொருளைத் தேடி ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம் என்று எண்ணி இறுமாந்த மனத்தராய் அத்தொழிலில் தொடர்தலை உறுதியாகக் கருதி வாழ்வீர்காள்! நெய்யை ஆறுபோல் ஆடியவரும், நீலகண்டரும், நீண்ட செஞ்சடையரும், நெற்றிக் கண்ணரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் ஐயாறே! ஐயாறே! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் தீர்த்துச் சிவனுலகை ஆளலும் கைகூடும்.

கு-ரை: இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்தோதி அருளியது.

பொய் ஆறா ஆறே – நிலையாமை நீங்காத முறைமையையுடைய பொருள்களையே. புனைந்து பேசி – சிறப்பித்துப் பேசி. “புலர்ந்து” என்பதனை, ‘புலர’ எனத் திரிக்க; ‘பொழுது புலர எழுந்தது முதல்’ என்பது பொருள். கையாறாக் கரணம் உடையோம் – ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம். “பொய்யாறா” என்றது முதல். “வாழ்வீர்” என்றது காறும், மக்கள் உலகியலில் இறுமாந்திருக்கும் நிலையை வகுத்தருளிச் செய்தவாறு. “நீலகண்டர்” என்றது, ‘சிவனார்’ என்னும் பெயரளவாய் நின்றது. நெய்யை ஆறுபோல ஆடிய சிவனார் என்க. அல்லல் – பிறவித்துன்பம். ‘அமரர் உலகம்’ என்பது குறைந்து நின்றது. ‘மரித்தல் (இறத்தல்) இல்லாதவன் என்னும் பொருளுடைய, ‘அமரன்’ என்னும் பெயர், மாயோன் நான்முகன், இந்திரன் முதலிய பலர்க்கும் உபசாரமாக, சிவபிரானுக்கே அஃது உண்மைப் பெயராம் ஆகலின், அவனை அடைந்தவரும் ‘அமரர்’ எனப்படுவர் என்பதும். அதனால், சிவனுலகமே ‘அமரலோகம்’ எனப்படும் சிறப்புடையது என்பதும் திருமுறைகளின் துணிபாகலின், “அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே” என்று அருளிச்செய்தார். சிவனுலகிற் சென்றவரும் பிறத்தல் உண்டாயினும், அஃது ஒரு தலையன்மையானும், ஒரோவழிப் பிறப்பினும், அஃது அல்லற் பிறவி யாகாது, “பற்றறுப்பாராக” (சிவஞானபோதம் – சூ. 8. அதி. 1)ப் பிறக்கும் பிறப்பே யாகலானும் சிவனுலகம் ஆளுதலாகிய பயன் பெற்றோர், அல்லல் தீர்ந்தவரேயாதலறிக.


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273