January 16, 2018 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / Short Story / ங்ங்கா

ங்ங்கா

1

    ங்ங்கா

“அனு! ஒரு 5 நிமிஷம் இங்க வாயேன்..!”
“நீங்க தான் வெட்டியா ஃபேஸ் புக் ல நேரத்த வீணாக்குரீங்கனா,என்னையும் ஏன் இந்த போட்டோ பாரு , வீடியோ பாருனு தொந்தரவு பன்றீஙக?”
“சரி!சரி! இங்க வா, இதான் கடைசி..இனிமே தொந்தரவு பண்ண மாட்டேன்”
“உங்க ப்ளாக்கா( சாலை) ..? “நீங்க எழுதுனதா..?” சொல்லிட்டு போக்கிரி வடிவேலு மாதிரி லாப்டாப் முன்னாடி இருந்த என்னை நகர்த்திட்டாள்.
கொஞ்சம் சிரிச்ச அவள் முகம் , முடிக்கும் போது சுண்டைக்கா போல‌ சுருங்கி இருந்தது,
“என்னா ? எப்படி இருக்கு..?”
“நான் சொன்ன மாதிரியே எழுதிருக்கலாம்ல…முடிவ ஏன் மாத்துனீங்க..?”
“இதான் நல்லா இருக்கும்,எதார்த்தமா…!”
“போங்க …! என்க்கு முடிவு பிடிக்கல…மொட்டையா இருக்கு..”
“போ .. ! உனக்கு ரசனையே இல்ல..”
“அதெல்லாம்..எங்களுக்கு இருக்கு..நீங்க ரசனையா எழுதலைனு சொல்லுங்க..!என்னோட கதையை சுட்டுட்டு , அதுல மானே,தேனை,பொன் மானே லாம் சேத்துட்டு..என்னமோ சொந்தமா எழுதின மாதிரி பில்ட் அப் குடுக்குறீங்க‌?ஏகப்பட்ட எழுத்து பிழை வேற..நீங்கலாம் என்ன தான் தமிழ் படிச்சீங்களோ..?”
“இவ்வுளவு பேசுரியே..இன்னும் கொஞ்ச‌ நாள் ல குழந்தை பிறக்க போகுது.. ஒரு தாலாட்டாச்சும் உனக்கு தெரியுமா?”
“அதென்ன பெரிய கம்ப சூத்திரமா.லுலுலுலாயினு பாடுனா போச்சு!”
“சும்மா நாக்கை ஆட்டுனா..அது பேரு தாலாட்டா..?
“ஆமாம் அதுக்கு பேரு தான் தாலாட்டு..?
“என்னடீ சொல்ற..?”
“தால் + ஆட்டு =  தாலாட்டு ..  தால் என்றால் நாக்கு.நாக்கை ஆட்டி ஆட்டி பாடுவதால் அதற்கு தாலாட்டு என்று பெயர்.
எப்புடி..? ” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.
“நல்லா தான் கடம் அடிச்சிருக்கே..ஒரு 2 மார்க்கை ஒப்பிச்சிட்டு சும்மா சீன் போடாதே…முடிஞ்சா ஒரு கவிதை எழுதுடி..ஒத்துக்குறேன்..?
சிறிது யோசித்தவளாய்….
“எவ்வளவோ பண்றோம்.இதை பண்ண‌ மாட்டோமா?என்ன தலைப்பு..?”என்றாள் சவால் விடும் தோரணையில்.
“நம்ப ஜுனியர் பத்தி எழுதனும்.நானும் எழுதுறேன்..நீயா ..? நானானு? பாத்துடலாம்…”
மறுநாள்…..
“இந்தா இதை படி..”என்றேன் எனது கவிதையை நீட்டி…
“உனக்காக காத்திருக்கிறோம் கண்ணே !
இல்லறம் எனும் ஆலயம் கட்டி 
உன் திருவடி பூஜிப்பதிற்காக !

பத்து மாதம் கருவாசம் கொண்டு ..
தாய்மை வரம் தந்தாய் உன் அன்னைக்கு ..
மெல்லிய அசைவுகள் தந்து 
கோடி இன்பம் கொடுத்தாய் இந்த தந்தைக்கு ..


பசி ,ருசி ,உறக்கம் யாவும் கலைந்தாள்
உண்பதெல்லாம் மசக்கையில் உமட்டினாள்
பூ போல் பாதம் பதித்து நடந்தாள்
பயணம் செய்ய மறுத்தாள்
முகம் துவண்டு , பலம் குறைந்து வாடினாள்
உன் அன்னை !
இன்னல்கள் யாதாயினும் 
மின்னல் என ஜொலிப்பால் 
உன் முகம் காணும் தருணம் நினைத்து .

அவள் துவண்ட பொழுதெல்லாம் நான் துடித்தேன் 
அவள் மனம் வாடாமல் காத்திட நினைத்தேன் 
அவள் புசிக்க மறுத்த போதும் 
உன் பெயர் சொல்லியே ஊட்டினேன்
உனக்காக செய்த ஓவ்வொன்றையும்..
அவளுக்காக என்று சிறு பொய்யும் உரைத்தேன் 
 

தூரத்தில் உனை காணுகின்றேன் 
சில சொப்பனத்திலே 
சில கற்பனையிலே!

அவ்வப்பொழுது சிறு கேள்வியும் 
எழுந்தது மனதுக்குள்ளே 
சொல் பேச்சு கேளாத சுட்டி பையனா நீ 
இல்லை
தந்தையின் மடி தேடும் தேவதையா நீ ..
நாட்கள் ஓவ்வொன்றையும் எண்ணுகின்றேன்
இந்த அழகிய ரகசியத்தை எண்ணியே …

உனக்காக காத்திருக்கிறோம் கண்ணே ! “
“என்ன எப்படி…?”
“ம்ம்…பரவால…நல்லாயிருக்கு!
“ம்ம்….சரி..சரி…உன்னோடுது எப்போ….?”
“தரோம்..தரோம்…”
மாலை பொழுது வந்தது.ஞாயறு மாலை மீண்டும் எங்களின் பிரிவிற்காக காத்துக்கொண்டிருந்தது.
“பேசாம இந்த வாரத்திலேந்து லீவு போட்டிருக்கலாம்..!”என்றென் அவளிடம்.
“அதெல்லாம் வேண்டாம்.பாப்பா பிறந்தப்புறம் லீவு போடுங்க போதும்.இப்போ கிளம்புங்க ..நேரம் ஆயிடுச்சு..”என்று வற்புறுத்தி அவளும் மனமில்லாமல் என்னை அனுப்பிவைத்தாள்.
ஆமை என கடந்தது இரு தினங்கள்.இன்று தான் கடைசி செக்-அப் , அவளது அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
“ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க‌.நீங்க உடனே கிளம்பி வாங்க….”
அவளுடைய குருஞ்செய்தி கண்ட பிறகு..அவசரமாக தஞ்சை பயணம்….போற வழியெல்லாம்..இறைவனிடம் வேண்டிக்கொண்டேச் சென்றேன்….பாதி பயணத்திலே தேவதை வந்த செய்தி எட்டியது.படபடப்பில் எட்டாத உறக்கம்,மகிழ்விழும் எட்டவில்லை.
விடிகாலை..தஞ்சை தொட்டது பேரூந்து….உச்சத்தை  எட்டியது என் படபடப்பு.அடுத்த 10 நிமிடத்தில் அவள் முன்னால் நான்.அன்னையின் கதகதப்பில் அழகாய் உறங்கிய அவள் இப்போது என் மடியில்.
மயக்கத்திலிருந்து எழுந்தாள் என்னவள் ….சிறிய உரையாடலுக்குப் பின்..
“உங்க பொண்ணுட்ட சொல்லிட்டேன்….நீங்க கேட்டூகுங்க…..”என்றாள்.
“என்னது..?” என்றேன் ஒன்றும் புறியாமல்…
“ங்ங்கா…” என்றது அந்த அழகிய சிவந்த உதடு….
என்ன வார்த்தை இது..எந்த மொழி இது…
ஒரு சொல்ல கவிதை சொல்லனும்னா .. “அம்மா” என்று எங்கையோ கேட்ட ஞாயபகம்…
ஒரு சொல்ல இன்னொரு கவிதை சொல்லனும்னா ..அதுவும் எல்லா மொழிக்கும் பொதுப்படையா சொல்லனும்னா
“ங்ங்கா…”  என்று சொல்லுவேன்….
மெலிதாய் என்னவள் சிந்திய புன்னகை … என் தோல்வியை எனக்கு உணர்த்தியது.

Comments

Contact Us

For Immediate quires Please contact here...