July 24, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / Thiruvaiyaru

Thiruvaiyaru

0

 திருவையாறு வரலாறு

இந்த புனிதத் தலம் திருவையாறு எனப் பெயர் பெற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தலத்தைப் பஞ்சநதம் என்று அழைப்பதோடு, இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு பஞ்சநதீஸ்வரர் அல்லது ஐயாறப்பர் எனப் பெயர் விளங்குவதாலும் இங்கு பாயும் ஐந்து நதிகளையொட்டியே இந்தப் பெயர் வந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. ஆகவே இவ்வாறுகள் முறையே வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் இவற்றையொட்டியே இந்தப் பெயர் வந்ததாகக் கருதலாம். இத்தலத்தின் பெயரே இங்கு கோயில் கொண்டுள்ள இறைவருக்கும் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்தின் தலபுராணப்படி சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை எனப்படும் நந்திதீர்த்தம் ஆகிய தெய்வீக தீர்த்தங்கள் இங்கு கலப்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் செய்திகள் உண்டு. ‘ஐயாறு’ எனும் சொல்லுக்கு அகன்ற ஆற்றையுடைய ஊர் என்ற தெளிபொருளும் உண்டு. இதன்பொருட்டே

நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடு
நலந்திகழும் நாலாறும், திருவையாறும், தெள்ளாறும் …

என்று தனது திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறுகிறார்.

திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். ‘ஐ’ என்றால் மேலான, உயர்வான என்றும் ‘ஆறு’ என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்டது.

இத்திருத்தலத்தைக் குறித்துப் பாடப்பெற்று நமக்குக் கிடைக்ககூடிய நூல்கள் அனைத்துமே சைவ இலக்கியங்கள்தான். தேவாரம் பாடிய மூவர் காலம் முதல் இன்றுவரை இத்தலம் மிகச் சிறந்த சைவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. திருப்புகழிலும் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலைத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பெருமானும் ‘திருவாசகம்’ கீர்த்தித் திருவகவலில் “ஐயாறதனில் சைவனாகியும்” என்று இங்கு சிவபெருமான் தனக்கு பூசை செய்யும் ஆதிசைவர் காசிக்குச் சென்றிருந்தபோது அவர் உருவில் வந்து தனக்கே பூசித்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273