October 20, 2017 admin@mythanjavur.com An Everlasting Cholan Empire....
Blog
Home / General / திருவையாறு தலவரலாறு

திருவையாறு தலவரலாறு

7

திருவையாறு தலவரலாறு

இந்த திருக்கோவிலின் தல வரலாறு கீழ்கண்டபடி கோவிலில் எழுதப்பட்டிருக்கிறது. இத்திருக்கோயிலை முதன் முதலில் பிரிய விரதன் எனும் சூரிய வம்சச் சக்ரவர்த்தி திருப்பணி செய்தான் என்பது புராண வரலாறு.

கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான். இவன் காடு கெடுத்து நாடாக்கி வளம் பெருக்கியவன் கல்லணை கட்டி, காவிரிக்குக் கரை எழுப்பி இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில் ஐயாற்றை அடைந்ததும் அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. இதனடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான், அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சத்த மாதர்கள் சண்டர், சூரியன் திருவுருவங்களும், யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றி காணப்பட்டன. மேலும் அகழவே நியமேசர் எனும் அகப்பேய்ச் சித்தர் நிட்டையிலிருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் பாதம் பணிந்தான் அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம் ”தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இம்மகாலிங்கத்திற்கும், மற்றைய படிமங்கட்கும் கோயில் எடுப்பாயாக” எனக்கூறி எவராலும் வெல்லற்கரிய தண்டமொன்று மளித்து, கோயில் கட்டுதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குளம்படியில் கிடைக்குமென அருள் புரிந்தார். அவ்வாறே கரிகாற் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்து நிவந்தங்கள் அளித்தான். கரிகாற் சோழனுக்கு ஐயாரப்பரே எல்லாம் வல்ல சித்தர் வடிவில் தான்தோன்றி நாதராக சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடம் காட்டி கோயிலும் கட்டச்செய்தார் என்பதறிந்தோம். இதற்குச் சான்று, கற்பக்கிரக பிரகாரத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்கக் கூடாதென்பதும், சோழனால் கட்டிய செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாயிருப்பதும், கரிகாற்சோழன், அவன் மனைவி இருவரின் சிலைகள் இருப்பது கண்டு உண்மை உணரலாம்.

கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்திற்கு முந்திய திருப்பணி, ஆதி கோயில் அமைப்பை மாற்றியுள்ளது. அருள் மிகு ஐயாரப்பர் எழுந்தருளியுள்ள கருவரைக் கற்றளி துவார பாலகர், யாளித்தூண்கள் பல்லவர்காலப் பணியாகும்.

கி.பி. 982[1]-இல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர் இதனைப் புதுக்கி, மகாதேவர்க்கு நிறைய அணிகலண்கள் வழங்கியுள்ளார்.

கி.பி. 1006 – ல் முதலாம் இராசராசன் (985 – 1014) மனைவி ஒலோக மாதேவியார் வட கைலாயம் எனும் ஒலோக மாதேவீச் சுரத்தைஎழுப்பி எழுந்தருளும் திருமேனிகள், ஒலோக வீதி விடங்கர் எனும் சோமஸ்கந்தர், விநாயகர் முதலான பஞ்சமூர்த்திகளை வழங்கியுள்ளார்.

கி.பி. 1014 – 1042 முதலாம் இராசேந்திர சோழ தேவர் மனைவி பஞ்சவன் மாதேவியார் தென் கைலாயம் கோயில் பழுதுபட்டு இருந்ததை புதுப்பித்தார்.

அடுத்து, கிருஷ்ண ராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றுள்ளது. சலவைத் தூண்கள் சாளுக்கிய நாட்டு வாகாடகச் சிற்பத் திறனை எடுத்துக்காட்டவே பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்தவையாகவுள்ளன.

கி.பி. 1118 – 1135 விக்ரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழக்கோபுரங்களும் எடுக்கப்பட்டிருப்பதுடன் வடகிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் அடிப்படை பீடத்துடன் எழும்பி நின்று விட்டது.

கி.பி. 1381 – ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் வீர சரவண உடையார் காலத்து செந்தலை கருப்பூர், கச்சி வீரப்பெருமான் மகளால் கோயில் மண்டப மதில் சீர்திருத்தம் பெற்றது.

கி.பி. 1530 – ல் அச்சுதப்ப நாயக்கர் நின்று போன (தண்டபாணி கோயில்) மண்டபத்தை 144 தூண்களுடைய அழகிய மண்டபமாக உருவாக்கி முடித்தார். அவர்காலத்து இடைமருதூர் ஆனையப்பப் பிள்ளையாலும், அவர் தம்பி வைத்திய நாதராலும் மேலக்கோபுரம், முதற் பிரகாரம், அதில் திருநடமாளிகைப் பத்தி (மாடி) மூன்றாம் பிரகாரத் தெற்குக் கோபுரம், திருக்குளம், காவிரி பூசைப் படித்துறை “கல்யாண சிந்து” மண்டபம், குதிரை பூட்டிய தேர் மண்டபங்கள் ஆகிய இவை யாவும் அவர்களால் எடுக்கப் பட்டனவே.

கி.பி. 1784 காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியார், மூன்றாம் பிரகார முகப்பு மண்டபத் திருப்பணி செய்துள்ளார். அவரும் அவரது இரு மனைவியர் திருவுருவங்களும் தூண்களில் உள்ளன. மூன்றாம் பிரகார கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப் பெற்றதாகும்.

கி.பி. 1937 – ல் நாமறிந்த வகையில் அம்மன் கோயில் முழுமையும் அழகு ஒழுகும் பளிங்குக் கருங்கள் திருப்பணியாக தேவக்கோட்டை சிவத்திரு உ.ராம.மெ.சுப.சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் குடும்பத்தினரால் திருப்பணி செய்யப் பெற்று 2-5-1937 ல் குடமுழுக்கு இனிதே நிறைவேறியுள்ளது.

கி.பி. 1971 – ல் திருக்கையிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுமையும் செப்பமுற திருப்பணி செய்யப்பெற்று 31-3-1971 ல் திருக்குடமுழுக்குப் பெருவிழா மிகச் சீறும் சிறப்புமாக நிகழ்ந்தேறியது.

[1] 1013 – 14 ஆம் ஆண்டு என கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விமலாதித்த தேவர்தான் இராஜராஜ சோழனின் புதல்வி குந்தவி தேவியை மணம்செய்திருக்கக் கூடும் என்பதும் கருத்து


Fatal error: Uncaught Exception: 12: REST API is deprecated for versions v2.1 and higher (12) thrown in /home4/suresh/public_html/mythanjavur/wp-content/plugins/seo-facebook-comments/facebook/base_facebook.php on line 1273